சென்னை பாடியில் பயங்கரம் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி 2 பேர் பலி மேலும் ஒரு பெண் படுகாயம்; தி.மு.க. பிரமுகர் கைது


சென்னை பாடியில் பயங்கரம் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி 2 பேர் பலி மேலும் ஒரு பெண் படுகாயம்; தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 3 May 2019 10:30 PM GMT (Updated: 3 May 2019 3:54 PM GMT)

சென்னை பாடி மேம்பாலத்துக்கு கீழே சர்வீஸ் சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடிபோதையில் காரை ஓட்டி வந்த தி.மு.க பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னை வில்லிவாக்கம் கிழக்குமாட வீதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 54). தி.மு.க. பிரமுகர். இவர், நேற்று காலை 9 மணியளவில் தனக்கு சொந்தமான சொகுசு காரில் பாடி மேம்பாலத்துக்கு கீழே உள்ள அன்னை சத்யா நகர் சர்வீஸ் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவர், அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் நடந்து சென்ற வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரைச்சேர்ந்த ஆதிலட்சுமி(50) என்ற பெண் மீது கார் மோதியது. இதில் அவர், கீழே விழுந்து துடிதுடித்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அந்த காரை விரட்டி பிடிக்க முயன்றனர். இதனால் தேவேந்திரன் காரை மேலும் வேகமாக ஓட்டினார். சிறிது தூரத்தில் சென்றபோது அங்கு நடந்துசென்ற அதே அன்னை சத்யா நகரைச்சேர்ந்த சரசா(60) என்ற பெண் மீதும் கார் மோதியது. இதில் சரசா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தொடர்ந்து ஓடிய கார், சாலையோரம் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த மோகன்(52) என்பவர் மீதும் மோதியது. இதில் மோகனுக்கு ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதன்பிறகும் தேவேந்திரன் காரை நிறுத்தாமல் வேகமாக சென்று சாலையின் இடதுபுறம் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது மோதினார்.

பின்னர் காரில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடமுயன்றார். அதற்குள் பொதுமக்கள் அவரை விரட்டிப்பிடித்து தர்மஅடி கொடுத்து வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு உயிருக்கு போராடிய ஆதிலட்சுமி, மோகன் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆதிலட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க. பிரமுகரான தேவேந்திரனை கைது செய்தனர்.

சென்னை பாடியில் காலையிலேயே தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story