என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு விசாரணை


என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு விசாரணை
x
தினத்தந்தி 4 May 2019 4:00 AM IST (Updated: 4 May 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு நேற்று விசாரணை நடத்தினார்.

சேலம்,

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு மகன் கதிர்வேல் (வயது 28). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்பட 7 வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் காட்டூரை சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் (32) என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில், சின்னனூரை சேர்ந்த முத்து (27), பள்ளப்பட்டியை சேர்ந்த பழனிசாமி (32) ஆகியோர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, முறுக்கு வியாபாரி கணேசன் கொலையில் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன், கதிர்வேல் உள்பட 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே, முறுக்கு வியாபாரி கணேசன் உள்பட சிலர் பெண்களை வழிமறித்து ஆபாச படம் எடுத்து அவர்களிடம் நகை, பணத்தை வழிப்பறி செய்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கணேசன் அப்ரூவர் ஆக மாறி நடந்த விவரங்களை போலீசாரிடம் தெரிவித்ததால் அவரை சிலர் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், குள்ளம்பட்டி பிரிவு ரோடு ஆலமரத்துக்காடு பகுதியில் ரவுடி கதிர்வேல் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து நேற்று முன்தினம் காரிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது, ரவுடி கதிர்வேல் தான் வைத்திருந்த கத்தியால் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்–இன்ஸ்பெக்டர் மாரி ஆகிய 2 பேரையும் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தற்பாதுகாப்புக்காக ரவுடி கதிர்வேலை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது, நெஞ்சில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், ரவுடி கதிர்வேல் கத்தியால் வெட்டியதால் காயம் அடைந்த போலீஸ் அதிகாரிகள் சுப்பிரமணி, மாரி ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், ரவுடி கதிர்வேல் என்கவுண்ட்டர் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தநிலையில், சேலம் 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணபவன் நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அவர், பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த கதிர்வேலின் உடலை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும், ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த கதிர்வேலின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ் அதிகாரிகள் சுப்பிரமணி, மாரி மற்றும் சம்பவ இடத்தில் இருந்த சப்–இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஏட்டு ராஜாமணி, போலீஸ்காரர் ஜெகதீஸ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்.

அதன்பிறகு, மதியம் ரவுடி கதிர்வேலின் உடலை டாக்டர் கோகுலரமணன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ததை போலீசார் வீடியோ மூலம் பதிவு செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து கதிர்வேலின் உடல் மதியம் 2.30 மணிக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ரவுடியின் சொந்த ஊரான மேட்டுப்பட்டி தாதனூர் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதனிடையே, ரவுடி கதிர்வேலின் உடல் வைக்கப்பட்டிருந்த பிரேத பரிசோதனை கூடம் அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


Next Story