நிலப்பத்திரத்தை திரும்ப தராததால் சேலத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி
சேலத்தில் அடமானம் வைத்த நிலப்பத்திரத்தை திரும்ப தராததால் 2 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்,
தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50). தறித்தொழிலாளி. இவர், கடந்த 2001–ம் ஆண்டு சேலம் செரிரோட்டில் செயல்பட்டு வரும் பேலஸ்நகர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் தனது நிலப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.2½ லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதேபோல், தாரமங்கலத்தை சேர்ந்த செல்வராஜ் (61) என்பவரும் தனது நிலப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.4 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
இதனிடையே, ரவி, செல்வராஜ் ஆகிய இருவரும் தாங்கள் வாங்கிய பணத்திற்கு வட்டி, அசலுடன் சேர்த்து அதற்கான கடன் தொகையை பேலஸ்நகர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் செலுத்திவிட்டனர். ஆனால் அவர்களது அடமான நிலப்பத்திரங்களை திரும்ப கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று மதியம் ரவி, செல்வராஜ் மற்றும் மேலும் சிலர் சேலம் பேலஸ்நகர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் நிலப்பத்திரத்தை கேட்டனர். அப்போது, சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம் அலுவலகத்தில் பத்திரங்கள் இருப்பதாகவும், அங்கிருந்து வந்தவுடன் திருப்பி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரவி, செல்வராஜ் ஆகியோர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, உரிய பணம் செலுத்தியபிறகும் அடமான நிலப்பத்திரத்தை திருப்பி கொடுக்காததால் தங்களை அலைக்கழிப்பு செய்வதாகவும், இதனால் மிகுந்த மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் கூறி கூட்டுறவு சங்கம் முன்பு திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த டவுன் போலீசார் உடனடியாக அங்கு வந்து, உடலுக்கு தீவைக்க முயன்ற ரவி, செல்வராஜ் ஆகியோரை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். மேலும், அவர்களை விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.