ஜெயங்கொண்டம் அருகே ரூ.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் லாரி டிரைவர் கைது


ஜெயங்கொண்டம் அருகே ரூ.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 3 May 2019 10:00 PM GMT (Updated: 3 May 2019 4:25 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகிமைபுரம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆனந்தவேல் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி அதிவேகமாக சென்றது. இதில் சந்தேகம் அடைந்த பறக்கும் படையினர் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில், 90 பெட்டிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என தெரிகிறது.

இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆனந்தவேல் புகார் அளித்தார். புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் அதனை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தார். பின்னர் லாரி டிரைவரான திருப்பூர் மாவட்டம், சூரியப்பன்பள்ளத்தை சேர்ந்த கருப்புசாமி மகன் நேருவை(38) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story