கிருஷ்ணகிரி கல்லூரி மாணவி தற்கொலை: பொள்ளாச்சி வாலிபர் கைது
கிருஷ்ணகிரி கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். எம்.எஸ்.சி. கணித பட்டதாரி. கல்லூரி மாணவியான இவருக்கும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகம்பாளையத்தை சேர்ந்த பாலன் (வயது 30) என்பவருக்கும் முகநூல் (பேஸ்புக்) மூலமாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
அப்போது பாலன் கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்லூரி மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாலனிடம் கூறினார். அதற்கு பாலன் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்லூரி மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் விசாரணை நடத்தி, பாலன் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 471 (நம்பிக்கை மோசடி செய்தல்), 506 (2) (கொலை மிரட்டல்), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாலனை நேற்று முன்தினம் இரவு கோவையில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அமெரிக்காவில் 3 மாதம் இருந்ததும், அந்த கால கட்டத்தில் தான் அந்த மாணவியிடம் பேசவில்லை என்றும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து கைதான பாலனை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story