சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வியாபாரி பலி


சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வியாபாரி பலி
x
தினத்தந்தி 4 May 2019 3:30 AM IST (Updated: 4 May 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

சங்கரன்கோவில்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலான்மறைநாடு பகுதியை சேர்ந்தவர் கனி (வயது 56) பழ வியாபாரி. இவருடைய மனைவி ராஜலட்சுமி (51). இவர்கள் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் நெல்லை மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள சத்திரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, சிவகாசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த சுப்புலாபுரத்தை சேர்ந்த மனோகரன் (54) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கனி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு கனி பலத்த காயமடைந்தார். ராஜலட்சுமி, மனோகரன் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் கனியை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கனி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
1 More update

Next Story