சூரியனை ஆராயும் வகையில், ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
சூரியனை ஆராயும் வகையில் ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் நாகர்கோவிலில் நேற்று கூறினார்.
நாகர்கோவில்,
இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று அவருடைய சொந்த ஊரான நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை கிராமத்துக்கு வந்தார். பின்னர் அங்குள்ள பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்தில் அவர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பானி புயல் குறிப்பிட்ட பகுதியில் கரையை கடந்துள்ளது. இது போன்ற புயல் பாதிப்பு பற்றிய பகுதிகளை துல்லியமாக கணிக்க முடிந்ததால் உயிர் சேதம், பொருட்சேதம் போன்ற எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க முடிந்தது. வருகிற ஜூலை மாதம் 9-ந் தேதி முதல் 16-ந் தேதிக்குள் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும்.
செப்டம்பர் மாதம் 6-ந் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. அது தரை இறங்கியவுடன் நிலவின் நிலப்பரப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும். நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 விண்கலம் இறங்கும். இதனால் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 108 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த சிறப்பு பயிற்சியை இஸ்ரோ வழங்க உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும்.
அடுத்த ஆண்டு முதல் பாதியில் சூரியனை ஆராயும் வகையில் ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்படும். இதன் மூலம் சூரியன் குறித்து தெரியாத பல தகவல்கள் தெரியவரும். சந்திரன், சூரியன் உள்பட பல்வேறு கிரகங்களை ஆராயும் முயற்சியில் இஸ்ரோ இறங்கி உள்ளது.
விண்ணிற்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு திட்ட வடிவமைப்பு நிறைவு பெற்று உள்ளது. வரும் 2022-ம் ஆண்டிற்குள் இந்தியா மனிதனை விண்ணிற்கு அனுப்பும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story