கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட அரசு பஸ் டிரைவர்கள் உள்பட 3 பேர் கைது ரூ.81 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்


கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட அரசு பஸ் டிரைவர்கள் உள்பட 3 பேர் கைது ரூ.81 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 May 2019 4:38 AM IST (Updated: 4 May 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட அரசு பஸ் டிரைவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.81 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு எலகங்கா அருகே கோகிலு கிராஸ் பகுதியில் ரூ.50 லட்சம் கள்ளநோட்டுகளை மாற்ற மர்மநபர்கள் சிலர் முயற்சிப்பதாக எலகங்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர், சக போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் முன்பாக சந்தேகப்படும் படியாக 3 பேர் சுற்றி திரிந்தனர்.

உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்கள். பின்னர் 3 பேரிடமும் சோதனை நடத்தப்பட்டது. அவர்களிடம் கள்ளநோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நோட்டுகளை 3 பேரும் மாற்ற முயன்றதும் தெரிந்தது. உடனே 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா லக்கிகாலா கிராமத்தை சேர்ந்த சோமனகவுடா என்ற சோமு(வயது 38), ஹாசன் மாவட்டம் சென்னராயபட்டணாவை சேர்ந்த கிரண்குமார் என்ற கிரண்(24), நஞ்சேகவுடா(32) என்று தெரிந்தது. இவர்களில் சோமனகவுடாவும், நஞ்சேகவுடாவும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தில் (பி.எம்.டி.சி) டிரைவர்களாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் கம்ப்யூட்டர், நவீன கருவிகள் மூலமாக 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை தயாரித்து, அதனை புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது. விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் கள்ள நோட்டுகளை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் ரூ.81 லட்சத்திற்கு கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் 3 பேர் மீதும் எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story