கடலூரில், போலீஸ்காரர்களை தாக்கிய 3 பேர் கைது - பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு


கடலூரில், போலீஸ்காரர்களை தாக்கிய 3 பேர் கைது - பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 May 2019 4:15 AM IST (Updated: 4 May 2019 5:30 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் போலீஸ்காரர்களை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக அவர்களை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் நாகராஜன். இவர் நேற்று மாலை கடலூர் லாரன்ஸ்ரோடு சுரங்கப்பாதை அருகில் பணியில் இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.

அவர்கள் சுரங்கப்பாதை அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக நின்று ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீஸ்காரர் நாகராஜன், அந்த வாலிபர்களை ஓரமாக செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நாகராஜனிடம் அதை சொல்ல நீ யார்? என்று கேட்டு தகராறு செய்தனர்.

இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் நாகராஜனை தாக்கி மிரட்டினர். இதை அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர்கள், வண்டிப்பாளையம் சிக்னலில் பணியில் இருந்த மற்றொரு போக்குவரத்து போலீஸ்காரரான தேவநாதனிடம் கூறினர்.

உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். இதற்கிடையில் தகவல் அறிந்த பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் அந்த 3 வாலிபர்களிடம் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் போலீஸ்காரர்களை சரமாரியாக தாக்கினர்.

இந்த தாக்குதலில் போலீஸ்காரர்கள் தேவநாதன், நாகராஜன் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அந்த 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்களை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் துரத்திச்சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அவர்களை புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரையும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அங்கும் அவர்கள் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாக பேசி ரகளை செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், பாலூர் சன்னியாசிபேட்டை காந்திநகரை சேர்ந்த சங்கர் மகன் கிருபாகரன் (வயது 25), தணிகாசலம் மகன் கன்னியப்பன் (24), அண்ணாமலை மகன் விஜயரங்கன் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த தாக்குதலில் காயமடைந்த தேவநாதன், நாகராஜன் ஆகிய 2 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தால் சுரங்கப்பாதை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story