பண்ருட்டி அருகே, இருபிரிவினர் மோதல், கல்வீச்சில் 8 பேர் காயம் - பதற்றம்-போலீஸ் குவிப்பு

பண்ருட்டி அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கல்வீசப்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது கோ.குச்சிப்பாளையம் கிராமம். நேற்று இந்த கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் சிலர் அங்குள்ள காலி இடத்தில் கைப்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள மேல்கவரப்பட்டு காலனியை சேர்ந்த 4 பேர் அங்கு வந்தனர்.
அவர்கள், அந்த சிறுவர்களிடம் ஏன் இங்கு வந்து விளையாடுகிறீர்கள் என்று கேட்டனர். இதனால் இருபிரிவினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த 4 பேரும் தங்களது காலனியை சேர்ந்த சிலருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மேல்கவரப்பட்டு பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்களில் கோ.குச்சிப்பாளையத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கு கிடந்த கற்களை எடுத்து, அந்த பகுதியில் இருந்த வீடுகள் மீது சரமாரியாக வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதில் கோ.குச்சிப்பாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரன்(வயது 15), ரகுபதி(40), தயாளன், சுப்புராயன் மனைவி செல்லம்மாள்(60), ராயர்(55) ஆகியோர் காயமடைந்தனர். மேலும் 3 வீடுகளும், 2 மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தன. கோ.குச்சிப்பாளையம் கிராம மக்கள் கல்வீசி தாக்கியதில் மேல்கவரப்பட்டை சேர்ந்த திவாகர் (24), தர்மராஜ் (45), செல்வி ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். காயமடைந்த இருபிரிவினரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் ஏராளமான போலீசார் கோ.குச்சிப்பாளையம் கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் காரணமாக கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story






