பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் ஆன்லைன் உதவி மையம் தொடக்கம்


பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் ஆன்லைன் உதவி மையம் தொடக்கம்
x
தினத்தந்தி 5 May 2019 4:00 AM IST (Updated: 4 May 2019 10:14 PM IST)
t-max-icont-min-icon

பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பர்கூர்,

இதுதொடர்பாக அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் கூறியதாவது:-

2019-20ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் சமர்ப்பித்தல் தொடங்கி உள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் ஆன்லைன் சேர்க்கை உதவிமையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் ரூ.500-ம், பட்டியலின மாணவர்கள் ரூ.250 கட்டணத்தை வங்கி வரைவோலை அல்லது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் செலுத்த வேண்டும். இதற்காக டெபிட் கார்டு, அந்த கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எடுத்து வரவேண்டும். வரைவோலையாக செலுத்துபவர்கள் ( The Secretary, TNEA, Payable at Chenai) என்ற பெயருக்கு செல்லத்தக்க வகையில் இருக்க வேண்டும்.

ஆன்லைன் பதிவுக்கு பிளஸ்-2 மதிப்பெண், மாணவரின் செல்போன், மின்னஞ்சல் முகவரியுடன் வரவேண்டும். பதிவின்போது ஒரு முறை பயன்பாட்டு ரகசிய குறியீடு எண் மாணவர் குறிப்பிடும் செல்போன் எண்ணுக்கு வரும். எனவே மாணவர்கள் தங்களின் செல்போனை கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். பின்னர் ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகல் வழங்கப்படும். அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் உதவி மையத்தில் சரிபார்க்கப் படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story