சேலம் அருகே துணிகரம்: 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் நகை கொள்ளை


சேலம் அருகே துணிகரம்: 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 5 May 2019 4:00 AM IST (Updated: 4 May 2019 10:25 PM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குறைவான வேகத்தில் சென்றதை பயன்படுத்தி இந்த கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சூரமங்கலம், 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவேலிப்பாளையம் மற்றும் மகுடஞ்சாவடி பகுதிகளில் ரெயில்வே தரைமட்ட பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் 20 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே சென்று வருகின்றன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு மயிலாடுதுறை-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோட்டிற்கு வந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ரெயில், சங்ககிரி அருகே மாவேலிப்பாளையம் பகுதியில் வந்தபோது, ரெயிலில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த வினோதினி, அம்பிகா ஆகிய 2 பெண்களிடம் இருந்து 11 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் பறித்தனர்.

அப்போது, அந்த பெண்கள் சத்தம் போட்டு கூச்சலிட்டதால், அந்த ஆசாமிகள் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.

இதேபோல், நள்ளிரவு 1 மணிக்கு கோவை-சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில், மாவேலிப்பாளையம் அருகே வந்தது. அப்போது, ரெயிலில் பயணம் செய்த கோவையை சேர்ந்த விமலா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பறித்துக்கொண்டு தப்பினர்.

இதைத்தொடர்ந்து வந்த கொச்சுவேலி-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் வடமாநில கும்பலை சேர்ந்த ஆசாமிகள் பெண்களிடம் நகைகளை பறித்து கைவரிசை காட்டியுள்ளனர்.

அதாவது, நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை ஈரோட்டில் இருந்து சென்னை, மைசூரு, பெங்களூரு சென்ற 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் இருந்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு-சேலம் இடையே காவிரி ஆர்.எஸ்., சங்ககிரி அருகே மாவேலிப்பாளையம், மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் ரெயில்வே பாலப்பணிகள் நடப்பதால், ரெயில்கள் மெதுவாக இயக்கப்படுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட வடமாநிலத்தை சேர்ந்த கும்பல், ஓடும் ரெயிலில் ஏறி தூங்கி கொண்டிருந்த பயணிகளிடம் நகை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஓடும் ரெயிலில் இருந்து அந்த கும்பல் குதித்து தப்பி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை கமிஷனர் சீனிவாசராவ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், சம்பவம் நடந்த இடம் ஈரோடு ரெயில்வே போலீஸ் கோட்ட எல்லைக்குள் வருவதால் அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அருகே 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பெண்களிடம் 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கும்பலை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story