உடன்குடி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


உடன்குடி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 5 May 2019 4:15 AM IST (Updated: 5 May 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மெஞ்ஞானபுரம், 

உடன்குடி அருகே சீர்காட்சி அம்மன்புரத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் திருப்பூரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராமலட்சுமி (32). இவர்களுக்கு காவ்யா என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் தன்னுடைய குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவில் சரவணன் தன்னுடைய மனைவி, மகளுடன் அப்பகுதியில் உள்ள தன்னுடைய அக்காளின் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவில் அனைவரும் அங்கு தூங்கினர். அப்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால், காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர், வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தார். பின்னர் வீட்டில் தூங்கிய ராமலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க தாலிச்சங்கிலியை பறித்தார். அப்போது கண்விழித்த ராமலட்சுமி ‘திருடன்... திருடன்...’ என்று கூச்சலிட்டார்.

உடனே கண்விழித்த சரவணன் உள்ளிட்டவர்கள் மர்மநபரை விரட்டிச் சென்றனர். ஆனாலும் மர்மநபர் நகையுடன் இருளில் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story