தூத்துக்குடி அருகே பயங்கரம்: கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழிலாளி குத்திக்கொலை லாரி டிரைவர் கைது


தூத்துக்குடி அருகே பயங்கரம்: கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழிலாளி குத்திக்கொலை லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 5 May 2019 4:00 AM IST (Updated: 5 May 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள வடக்கு காலாங்கரையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் மேகலிங்கதுரை (வயது 25), லாரி டிரைவர். இவருக்கு பானு என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் லிங்கதுரை (23), கூலி தொழிலாளி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேகலிங்கதுரை திடீரென தனது வீட்டை காலி செய்து விட்டு சோரீஸ்புரத்தில் குடியேறினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வடக்கு காலாங்கரையில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மேகலிங்கதுரை தனது நண்பரான தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த லாரி கிளனர் கோபிநாத் (28) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது லிங்கதுரை தனது வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தார். இதனை பார்த்த மேகலிங்கதுரை, கோபிநாத் ஆகியோர் லிங்கதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென மேகலிங்கதுரை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் லிங்கதுரையின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மேகலிங்கதுரை, கோபிநாத் இருவரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், கத்திக்குத்தில் காயம் அடைந்த லிங்கதுரையை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லிங்கதுரையை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அதே பகுதியில் பதுங்கி இருந்த மேகலிங்கதுரை, கோபிநாத் ஆகியோரை இரவு கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் லிங்கதுரை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது, மேகலிங்கதுரையின் மனைவிக்கும், லிங்கதுரைக்கும் கடந்த சில மாதங்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனை அறிந்த மேகலிங்கதுரை 2 பேரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மேகலிங்கதுரை தனது வீட்டை காலி செய்துவிட்டு சோரீஸ்புரம் சென்றார். இந்த நிலையில் லிங்கதுரை சோரீஸ்புரத்துக்கும் சென்று வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மேகலிங்கதுரை தனது நண்பர் கோபிநாத்துடன் சேர்ந்து லிங்கதுரையை குத்திக்கொலை செய்தது தெரியவந்தது.

கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலை கைவிட மறுத்த வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story