கல்குவாரியில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவன் பலி


கல்குவாரியில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவன் பலி
x
தினத்தந்தி 5 May 2019 3:45 AM IST (Updated: 5 May 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் கல்குவாரியில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

புனே,

புனே மாவட்டம் ஜாதவ்வாடி பகுதியை சேர்ந்தவன் கவுதம் சுதிர் (வயது17). 12-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தான். கவுதம் சுதிர் நேற்று முன்தினம் டியூசன் செல்வதாக கூறிவிட்டு நண்பர்களுடன் சாக்கன், மோய் கிராமத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்றான். அங்கு தேங்கி கிடந்த தண்ணீரில் அவன் நண்பர்களுடன் குளித்தான். அப்போது மாணவன் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினான்.

நண்பர்கள் அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் கவுதம் சுதிர் தண்ணீரில் மூழ்கி மாயமானான். அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மாணவனை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களாலும் தண்ணீரில் மூழ்கிய மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி பலியான மாணவனின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சாக்கன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story