அக்னிநட்சத்திரம் தொடக்க நாளில் வெயில் சுட்டெரித்ததால் நுங்கு, கரும்புச்சாறு வாங்குவதற்காக குவிந்த மக்கள்


அக்னிநட்சத்திரம் தொடக்க நாளில் வெயில் சுட்டெரித்ததால் நுங்கு, கரும்புச்சாறு வாங்குவதற்காக குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 4 May 2019 10:45 PM GMT (Updated: 4 May 2019 7:51 PM GMT)

அக்னி நட்சத்திரம் தொடக்க நாளில் வெயில் சுட்டெரித்ததால் நுங்கு, கரும்புச்சாறு வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் குவிந்தனர். 2 நுங்கு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 103 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது.

பகலில் தான் வெயில் சுட்டெரிக்கிறது என்றால் இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மின்விசிறி இல்லாமல் தூங்க முடியாத நிலை உள்ளது. மின்விசிறியில் இருந்தும் அனல் காற்று தான் வீசுகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.

கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னிநட்சத்திரம் நேற்று தொடங்கியது. அக்னிநட்சத்திரம் தொடக்க நாளில் வழக்கத்தை விட வெயில் அதிகமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் கானல் நீர் தோன்றியது. மக்களும் வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள நுங்கு, இளநீர், பதநீர், வெள்ளரிக்காய், கரும்புச்சாறு போன்றவற்றை அதிக அளவில் வாங்கி பருகினர். இதனால் சாலையோரங்களில் உள்ள நுங்கு, கரும்புச்சாறு கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 2 நுங்கு 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சிறிய நுங்காக இருந்தால் 3 வரை கொடுத்தனர்.

நுங்கு விற்பனை செய்யப்பட்ட இடங்களில் பொதுமக்கள் காத்திருந்து வாங்கிச்சென்றனர். இது தவிர குளிர்பான கடைகளிலும் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் காணப்பட்டது. அக்னி நட்சத்திரம் வருகிற 29-ந்தேதி முடிவடைகிறது. தொடக்க நாளில் வெயிலின் தாக்கம் இப்படி என்றால், அக்னி நட்சத்திரம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறுகிறார்கள். 

Next Story