தஞ்சை அருளானந்தம்மாள் நகரில் குப்பைக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


தஞ்சை அருளானந்தம்மாள் நகரில் குப்பைக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 May 2019 11:00 PM GMT (Updated: 4 May 2019 8:02 PM GMT)

தஞ்சை அருளானந்தம்மாள் நகரில் குப்பைக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகரில் ஜெபமாலைபுரம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தஞ்சை அருளானந்தம்மாள் நகர் 12-வது தெருவில் குழந்தைகள் விளையாடும் இடம், சமுதாயக்கூடம், ரேசன்கடை 36 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டது. இந்த விளையாட்டுத்திடலில் சங்க நிகழ்ச்சிகளில் சுதந்திர தின விழா, பொங்கல் விளையாட்டு விழா போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த இடத்தை சுற்றி ஏராளமான குடியிருப்புகள், குழந்தைகள் இல்லம், பள்ளிகள் உள்ளன. இந்த நிலையில் இந்த விளையாட்டுத்திடல் பகுதியை மக்கும், மக்கா குப்பை பிரிக்கும் கிடங்காக மாற்றுவதற்கு கட்டிடம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பொக்லின் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்றது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் பொக்லின் எந்திரமும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் பணி தொடங்குவர்கள் என கருதி 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

இது குறித்து அருளானந்தம்மாள் நகர் நல சங்க தலைவர் பூவலிங்கம், செயலாளர் இளங்கோ, துணைத்தலைவர் கணேசமூர்த்தி, இணை செயலாளர் முத்துமகேஷ், பொருளாளர் மணிவாசகம் ஆகியோர் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள், “எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களின் கருத்தை கேட்காமல் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வரைபட ஒப்புதல்படி விளையாட்டுத்திடலில் வேறு வகைக்காக கட்டிடம் கட்டக்கூடாது. நகருக்கான பொதுபயன்பாடு இட அளவை குறைப்பது விதி மீறலாகும். நிர்வாக மட்டத்தில் இதை செயல்படுத்தக்கூடாது.

இந்த திடலில் அம்மா விளையாட்டு மையம் அமைத்திட சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்களை வரவேற்கும், ஒத்துழைக்கும் எங்கள் நகர் மக்கள் தங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இந்தவகை கட்டிட வேலைகளை பொதுமக்கள் கருத்தை கேட்டு பாதிப்பு ஏற்படாத இடத்தில் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முடிவு எடுக்கும் வரை தொடர்புடைய பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story