அக்னி நட்சத்திரம் தொடக்கம்: அரியலூரில் கடுமையான வெயில் கொளுத்தியது


அக்னி நட்சத்திரம் தொடக்கம்: அரியலூரில் கடுமையான வெயில் கொளுத்தியது
x
தினத்தந்தி 5 May 2019 4:15 AM IST (Updated: 5 May 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. தொடங்கிய முதல் நாளிலியே பெரம்பலூரில் கடுமையான வெயில் கொளுத்தியது.

அரியலூர்,

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்க தொடங்கியது. அப்போதே இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதுபோல் கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கமும் எதிர்பார்த்ததை விட கடுமையாகவே காணப்பட்டது. பெரம்பலூரில் கடந்த பல நாட்களாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தியது. அதுமட்டுமின்றி கோடைமழை பெய்யும் என்று எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மழை பெய்யாததால் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டன. மேலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு “அக்னி நட்சத்திரம்” வெயிலின்போது வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நேற்று தொடங்கியது.

வெறிச்சோடிய தெருக்கள்

கத்திரி வெயிலின் தொடக்கமே பயங்கரமாக இருந்தது. அந்த அளவிற்கு பெரம்பலூரில் காலை 10 மணியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெப்பத்தின் தன்மை மேலும் கூடியது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கினர்.

மதிய நேரத்தில் பெரும்பாலான தெருக்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து சென்றோர் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டு சென்றதை காணமுடிந்தது. பெரம்பலூரில் நேற்று கடுமையான வெயில் கொளுத்தியதோடு அனல்காற்றும் வீசியது. சாலைகளில் வெயிலின் தாக்கத்தினால் பல இடங்களில் கானல் நீர் தெரிந்தது.

வெயிலின் கொடுமையை சமாளிக்க...

அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். வெயில் கொடுமையை சமாளிக்க பலர் பெரம்பலூரில் உள்ள நீச்சல் குளத்தில் குளியல் போட்டனர். வெயிலில் சுற்றியவர்களுக்கு தாகம் அதிகமாக இருந்ததால் குளிர்ந்த பானங்களை பருகுவதற்கு அதிகமாக விரும்பினார்கள். இதனால் சாலையோரங்களில் உள்ள இளநீர், கரும்புச்சாறு, தர்ப்பூசணி, குளிர்பானங்கள், முலாம் பழம் ஜூஸ் கடைகள், ஐஸ்கிரீம் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்த அளவுக்கு வெயிலின் உஷ்ணம் காணப்பட்டது. வருகிற 29-ந்தேதி வரை உள்ள அக்னி நட்சத்திர வெயிலை எதிர்கொள்ள மக்கள், கோடை மழை பொழியுமா? என்று எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். 

Next Story