திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் விழாவை இருதரப்பினரும் ஒற்றுமையாக நடத்த முடிவு


திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் விழாவை இருதரப்பினரும் ஒற்றுமையாக நடத்த முடிவு
x
தினத்தந்தி 5 May 2019 4:15 AM IST (Updated: 5 May 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் விழாவை இருதரப்பினரும் ஒற்றுமையாக நடத்த வேண்டும் என அமைதி பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.

மலைக்கோட்டை,

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகில் உலகநாதபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி 67-ம் ஆண்டு திருவிழா வருகிற 10-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த கோவில் சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்சினை உள்ளதால், இது குறித்து திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை தாசில்தார் சண்முகவேலன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தையில் உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் வழிபடுவோர் நலச்சங்கம் தரப்பில் ரெங்கராஜ், எதிர்தரப்பில் ராஜசேகர் உள்பட 5 பேர் கலந்து கொண்டனர். மேலும் கண்டோன்மெண்ட் போலீசார், மண்டல துணை தாசில்தார் மற்றும் தெற்கு பகுதி வருவாய் ஆய்வாளரும் கலந்து கொண்டனர்.

அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் இருதரப்பிலும் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

ஒற்றுமையுடன் நடத்த முடிவு

கோவிலின் உள்ளே வழிபடுவோர் நலச்சங்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கோவில் சாவியை நிர்வகிக்கும் பொறுப்பு தற் போதைய நிலையே தொடர வேண்டும். ராஜசேகர் தரப்பினர் கோவில் விழா தொடர்பாக அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், ரெங்கராஜ் தரப்பினர் அழைப்பிதழின்படி நிகழ்ச்சிகளை நடத்தலாம். கோவில் விழா நடத்தும் உரிமை தொடர்பாக கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு இருதரப்பினரும் கட்டுப்பட வேண்டும்.

முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒற்றுமையுடன் இணைந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு இடமளிக்காத வகையில் நடத்திட இருதரப்பினரும் ஒத்துக்கொண்டனர். போலீஸ் தரப்பில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டது.

இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. 

Next Story