பேக்கரி உரிமையாளர் வீட்டில் 14 பவுன் நகை திருட்டு வடமாநில தொழிலாளி கைவரிசை


பேக்கரி உரிமையாளர் வீட்டில் 14 பவுன் நகை திருட்டு வடமாநில தொழிலாளி கைவரிசை
x
தினத்தந்தி 5 May 2019 3:34 AM IST (Updated: 5 May 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பேக்கரி உரிமையாளர் வீட்டில் 14 பவுன் நகையை திருடிய வடமாநில தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 50). இவர் திருப்பூர் செவந்தாம்பாளையத்தில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி எழிலரசி(44). கடந்த 6 மாதத்துக்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பாசில்(25) என்பவரை பேக்கரியில் வேலைக்கு சேர்த்துள்ளனர். இவர் பேக்கரியில் வேலை செய்துவிட்டு, சிவக்குமாரின் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

இந்தநிலையில் பாசில் சரிவர வேலை செய்யாமல் இருந்ததால் சிவக்குமாரும், எழிலரசியும் பாசிலை திட்டியுள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் இருவரும் பேக்கரியில் இருந்துள்ளனர். அப்போது பாசிலுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே கணவன்–மனைவி இருவரும் சேர்ந்து பாசிலை வேலையை விட்டு நின்று விடுமாறு கூறி சத்தம் போட்டனர். இதனால் பாசில் வேலையை விட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் அன்று இரவு கணவன்–மனைவி இருவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 14 பவுன் நகைகளை காணவில்லை. இருவரும் அதிர்ச்சி அடைந்து அக்கம், பக்கத்தில் விசாரித்தபோது, மதிய நேரத்தில் பாசில் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் எழிலரசி புகார் அளித்தார். போலீசார் சென்று விசாரணை நடத்தியபோது, பாசில் நகையை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. அத்துடன் வீட்டின் சாவியை எழிலரசி வீட்டுக்கு முன்பு ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டு பேக்கரிக்கு செல்வது வழக்கம். அந்த இடம் பாசிலுக்கு நன்கு தெரியும். நேற்று முன்தினம் பாசில் வீட்டுக்கு வந்து சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்து இரும்பு கம்பியால் பீரோவை நெம்பி உடைத்து நகையை திருடிச்சென்றதும் தெரியவந்தது. பாசில் அதே வீட்டில் தங்கியிருந்ததால் நேற்று முன்தினம் அவர் வீட்டுக்கு வந்து சென்றபோதும் கூட அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு எந்த சந்தேகம் ஏற்படவில்லை. இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை திருடிச்சென்ற பாசிலை தேடி வருகிறார்கள்.


Next Story