திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தில் தறி நெய்து நெசவாளர்களுடன் உரையாடிய ஸ்டாலின் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம் என உறுதி
திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தின் போது தறி நெய்து நெசவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். ஆட்சிக்கு வந்ததும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 2–வது நாளாக பிரசாரம் செய்தார்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் கைத்தறி நகர், அங்கயற்கண்ணி காலனியில் உள்ள விநாயகர் கோவில் முன்பு திண்ணை பிரசாரமும் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
எழுச்சியாக, உணர்ச்சியாக, மகிழ்ச்சியாக உங்களை பார்க்கும்போது தமிழகத்தில் நல்ல மாற்றம் வரப்போகிறது என்பது தெரிகிறது. அதன் அடையாளமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. மத்தியில் மோடி அரசு மீது மக்களுக்கு கோபம் உள்ளது. எனவே கடந்த 18–ந்தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவளித்து உள்ளீர்கள். இதேபோல் வருகிற 19–ந்தேதி நடைபெறும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் டாக்டர் சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. அதில் பெரும்பாலான ஊராட்சிகளில் மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து, அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுத்து வந்துள்ளோம். இந்த பணியை தி.மு.க.வை தவிர எந்த கட்சியும் செய்யவில்லை. தமிழகத்தில் ஊராட்சிகளில் குடிநீர், சுகாதாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. குறிப்பாக சுகாதார சீர்கேடுகள் நிறைந்துள்ளன. அதை நேரடியாக பார்த்து மக்கள் துயரங்களை அறிந்துள்ளோம். இதற்கு காரணம் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் ஊராட்சிகளில் குறை வந்திருக்காது. மக்களுக்கான அடிப்படை வசதியை கூட செய்ய முடியாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
ஒன்றே முக்கால் ஆண்டு ஆயுள் உள்ள இந்த ஆட்சி வருகிற 23–ந்தேதிக்கு பிறகு முடிவுக்கு வரும். தி.மு.க. ஆட்சி வரப்போகிறது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதைவிட மக்களுக்கு கூடுதலாக உள்ளது.
நெசவாளர்களுக்கும், தி.மு.க.வுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. அறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி ஆகியோர் நெசவாளர்கள் வாழ்வாதாரத்திற்காக கைத்தறி துணிகளை தங்களது தோளில் சுமந்தனர். கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தபோது கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் மின்சாரமும் வழங்கினார். நெசவாளர்களுக்கு என்று நல வாரியம் அமைத்தார்.
தற்போது நெசவாளர்கள் ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த தொழில் நலிவடைந்து போய் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். கூலி உயர்வு தரப்படும். இதை இடைத்தேர்தலுக்காக சொல்லவில்லை. சொல்வதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்று கருணாநிதி சொல்வார். அவரது மகனான நான் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நேரத்தில், நான் ஆட்சிக்கு வந்தால் ஓராண்டில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும், 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. இதேபோல் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றார். அதுவும் ஏமாற்றுதான். 15 காசு கூட வங்கிக்கணக்கில் தரவில்லை.
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அத்தகைய விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தும், உருண்டு புரண்டும், அரை நிர்வாணம், முழு நிர்வாணம் என்று பல்வேறு போராட்டங்களும் நடத்தினர். ஆனால் விவசாயிகளை அழைத்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சினிமா நடிகைகளுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கினார். தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல கூட வரவில்லை. போதுமான நிதியும் ஒதுக்கவில்லை. எனவே மத்தியில் பா.ஜ.க. அரசுக்கும், தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மு.க.ஸ்டாலின், அப்பகுதியில் உள்ள நெசவாளர் ஒருவரது வீட்டிற்குள் சென்று, பட்டு சேலைக்கான தறியை நெய்தார். அப்போது நெசவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அவர்களிடம் உரையாடி, ஆட்சிக்கு வந்ததும் நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். திண்ணை பிரசாரத்தின்போது, செம்மொழி மற்றும் தமிழ்ச்செல்வி என்று 2 குழந்தைகளுக்கு அவர் பெயர் சூட்டினார்.