புதுச்சேரி - கடலூர் சாலையில் காவு வாங்க காத்திருக்கும் தடுப்புச்சுவர்


புதுச்சேரி - கடலூர் சாலையில் காவு வாங்க காத்திருக்கும் தடுப்புச்சுவர்
x
தினத்தந்தி 4 May 2019 11:42 PM GMT (Updated: 4 May 2019 11:42 PM GMT)

புதுச்சேரி - கடலூர் சாலையில் தாழ்வான தடுப்புச்சுவரில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.

புதுச்சேரி,

புதுச்சேரி- கடலூர் சாலையில் ஏ.எப்.டி. மில் பகுதியில் ரோட்டின் நடுவே தடுப்புச்சுவர் உள்ளது. இது தாழ்வாக இருப்பதாலும், இந்த பகுதியில் இரவு வேளையில் போதிய மின் விளக்கு வெளிச்சம் இல்லாததாலும் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. புதுவைக்கு சுற்றுலா வரும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இந்த தடுப்புச்சுவரில் மோதி தொடர்ச்சியாக விபத்துகள் நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு வாகனமாவது இந்த தடுப்புச்சுவரில் மோதி விடுவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் கடலூரில் இருந்து நேற்று இரவு புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதியது. இதில் கார் தடுப்புச்சுவரின் நடுவே சென்று நின்றது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பின்னர் அந்த வழியாக சென்றவர்கள், விபத்தில் சிக்கிய காரை போராடி அங்கிருந்து அகற்றினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகள், ‘இந்த பகுதியில் நடைபெறும் தொடர் விபத்துகளை தடுக்க தாழ்வாக உள்ள தடுப்புச்சுவரை உயர்த்தி அமைக்கவும், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டுமெனவும், வெளிச்சத்திற்காக புதிதாக மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். காவு வாங்க காத்திருக்கும் தடுப்புச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Next Story