அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பாரதீய ஜனதா கோரிக்கை


அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பாரதீய ஜனதா கோரிக்கை
x
தினத்தந்தி 5 May 2019 5:15 AM IST (Updated: 5 May 2019 5:15 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசுப்பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டுமானால் புதுவை மக்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக அரசு பள்ளிகளை தேர்வு செய்யவேண்டும். ஆனால் போதிய கட்டமைப்பு, பராமரிப்பு, விளையாட்டு மைதானம் இல்லாததால் இங்குள்ள திறமையான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேருகின்றனர்.

பாரதீய ஜனதா கட்சி ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அரசு பள்ளிகள் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் புதுவையில் அரசு பள்ளிகளை மேம்படுத்த எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. இந்த நிலையை மாற்ற அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகளை பல மையங்களில் ஏற்பாடு செய்யவேண்டும். மாநில அரசின் நிர்வாக சீர்கேட்டாலும், கல்வித்துறையின் மெத்தன போக்கினாலும் கடந்த 10 ஆண்டுகளாக அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற ஏழை மாணவர்கள் ஒரு சதவீதம்கூட மருத்துவம் போன்ற சிறந்த துறைகளில் பயில முடியவில்லை. நடுத்தர மக்களின் எதிர்காலத்தை புதுவை அரசு கேள்விக்குறியாக்கி உள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் மற்றும் அனைவருக்கும் வருடத்துக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, தரமான கல்வி வழங்கவேண்டும். இதுபோன்ற திட்டங்களால் அரசு பள்ளிகள் மூடப்படுவது தடுக்கப்பட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.


Next Story