குடும்ப உறவினை தாண்டி அன்பு உருவாக வேண்டும் அமைச்சர் நமச்சிவாயம் விருப்பம்


குடும்ப உறவினை தாண்டி அன்பு உருவாக வேண்டும் அமைச்சர் நமச்சிவாயம் விருப்பம்
x
தினத்தந்தி 4 May 2019 11:50 PM GMT (Updated: 4 May 2019 11:50 PM GMT)

குடும்ப உறவினை தாண்டி அன்பு உருவாக வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் விருப்பம் தெரிவித்தார்.

புதுச்சேரி,

இந்திய இளைஞர்கள் விடுதிகள் சங்கத்தின் புதுச்சேரி கிளை சார்பில் பெண்களுக்கான சங்கம் ஷான் தி ஆர்க் என்ற பெயரில் புதுவையில் நேற்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவுக்கு புதுச்சேரி மாநில கிளையின் அவைத்தலைவர் எழிலன் லெபேல் தலைமை தாங்கினார். அனு முத்துக்குமார் வரவேற்று பேசினார்.

இந்திய இளைஞர்கள் விடுதிகள் சங்கத்தின் தேசிய பேரவை தலைவர் வெங்கடநாராயணன் பெண்களுக்கான இளைஞர் விடுதிகள் சங்க கிளையை தொடங்கிவைத்தார். விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:–

பெண்களுக்கு முக்கியத்துவம் தர புதுவையில் முதன் முதலாக பெண்களுக்கான இளைஞர் விடுதி சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. புதுவையில் ஏற்றப்பட்ட இந்த தீபம் உலகம் எங்கும் பரவி பெண்களுக்கு உதவும்.

நான் கடந்த 1987–ம் ஆண்டு இளைஞர் விடுதி சங்கத்தில் சேர்ந்தேன். அப்போது எனக்கு எந்த கவலையும், பொறுப்பும் கிடையாது. அந்த காலகட்டத்தில் அமைதிக்கான இளைஞர்களின் சைக்கிள் பயணம் நடந்தது. அந்த பயணத்தில் நானும் கலந்துகொண்டேன். இதனால் டெல்லிக்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அன்றுமுதல் இன்றுவரை அடிக்கடி டெல்லி செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கட்டுக்கோப்பாக விட்டு கொடுக்கும் பண்பை இதுபோன்ற சங்கங்கள் மூலம் கற்றுக்கொள்கிறோம். நட்பை பரிமாறும் விதத்தினை இத்தகைய சங்கங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். குடும்ப உறவினை தாண்டி அன்பு உருவாக இதுபோன்ற சங்கங்கள் அதிகம் வேண்டும்.

நாம், நமது என்ற நிலை மாறி நான் – எனது என்ற நிலைக்கு வந்துள்ளோம். சமுதாயத்தின் எண்ண ஓட்டம் மாறி உள்ளது. கூட்டு குடும்பங்கள் தனி குடும்பமாகி வருகிறது. எந்திரமயமான வாழ்க்கையில் நாம் பயணப்படுகிறோம். உறவினர்களை தாண்டி பாசம் உருவாக இதேபோன்ற சங்கம் அவசியம். நல்ல முறையில் வாய்ப்பினை உருவாக்கி சமுதாயம், மாநிலம், நாடு முன்னேற ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.


Next Story