திருவொற்றியூரில் பரிதாபம் கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


திருவொற்றியூரில் பரிதாபம் கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 6 May 2019 4:30 AM IST (Updated: 5 May 2019 10:13 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் கடலில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் ஈசானிமூர்த்தி கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். மீனவர். இவரது மகன் சஞ்சய் (வயது 13). அதே பகுதியில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

அதே பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மகன் மதன் (14). அதே பள்ளியில் 7-ம் படித்து வந்தான்.

இந்த நிலையில் மாணவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பகல் திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் அருகே கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த ராட்சத அலை இருவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதில் அவர்கள் கடலில் மூழ்கினர்.

அருகில் வேறு யாரும் அங்கு இல்லாததால் மாணவர்கள் கடலில் மூழ்கியது மற்றவர்களுக்கு உடனடியாக தெரியவில்லை.

இதற்கிடையே வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் மாணவர்களின் பெற்றோர், தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சென்று தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் தங்கள் மகன்களை காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் கடற்கரையில் மாணவன் சஞ்சயின் உடல் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு மாணவரும் கடல் அலையில் சிக்கி காணாமல் போனாரா? என்ற கோணத்தில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும், மீனவர்களும், கடலோர காவல் படையினரும் கடலில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பகல் மாணவன் மதனின் உடல் திருவொற்றியூர் கோவில் அருகே கரை ஒதுங்கியது. கடலில் குளித்த மாணவர்கள் இருவரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. இதில் கடலில் மூழ்கி இருவரும் பரிதாபமாக இறந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story