மாவட்டத்தில் 15,575 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர்


மாவட்டத்தில் 15,575 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 5 May 2019 11:15 PM GMT (Updated: 2019-05-05T22:19:56+05:30)

சேலம் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வை 15,575 மாணவ-மாணவிகள் எழுதினர்.

சேலம்,

தமிழகத்தில் நேற்று ‘நீட்‘ தேர்வு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, சோனா கல்லூரி உள்பட 17 மையங்களில் ‘நீட்‘ தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத 17 ஆயிரத்து 500 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 15 ஆயிரத்து 575 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். 1,925 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து மாணவ-மாணவிகள் சேலம் வந்து தேர்வு எழுதினர். வெளியூர்களில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அதிகாலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்து காத்திருந்தனர். அவர்களில் பலர் காலை, மதியம் உணவை அங்கேயே கொண்டு வந்து சாப்பிட்டனர்.

மாணவ, மாணவிகள் மதியம் 12 மணியளவில் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மதியம் 1.30 மணிக்கு மேல் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. ‘நீட்‘ தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.

மாணவர்கள் தனி வரிசையாகவும், மாணவிகள் தனி வரிசையாகவும் வரவழைக்கப்பட்டு செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருக்கிறார்களா?, நிபந்தனைகளை மீறி ஏதேனும் பொருட்களை கொண்டு வந்திருக்கிறார்களா? என சோதனை நடத்தப்பட்டது. பலத்த சோதனைக்கு பிறகே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் வளையல், கம்மல், கொலுசு, மூக்குத்தி, சங்கிலி, துப்பட்டா உள்ளிட்டவைகளை கழற்றி தங்களது பெற்றோரிடம் மாணவிகள் கொடுத்ததை காணமுடிந்தது. மாணவர்கள் தாங்கள் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கொடியை கழற்றி பெற்றோர்களிடம் கொடுத்தனர்.

மாணவர்கள் ஷூ அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்ததால் பெரும்பாலானோர் செருப்புகளை அணிந்து வந்தனர். ஒரு சிலர் செருப்பு அணியாமல் தேர்வு எழுத சென்றதை காணமுடிந்தது. மேலும் மாணவர்கள் பயன்படுத்தும் கண்ணாடிகளும் சோதனை செய்யப்பட்டன. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்திய பிறகே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

‘நீட்‘ தேர்வு நடந்த அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்கு செல்ல மாணவ-மாணவிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

மேலும் ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்பட 6 இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ‘நீட்‘ தேர்வு தொடர்பான உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு தேர்வு மையம் இருக்கும் இடம் தொடர்பான சந்தேகங்களுக்கு அங்கு விளக்கம் அளித்தனர். சில மாணவர்களை தேர்வு மையத்திற்கும் அழைத்து சென்றனர்.

Next Story