மக்களுக்கான திட்டங்களை வழக்கு போட்டு தி.மு.க. தடுக்கிறது: மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு கானல் நீராகத்தான் போகும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
மக்களுக்கான திட்டங்களை வழக்கு போட்டு தி.மு.க. தடுக்கிறது. மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சராகும் கனவு கானல் நீராகத்தான் போகும் என்று அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கரூர்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.வி.செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு கரூர் மாவட்டத்துக்கு நேற்று மாலை வந்தார். அவருக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் கடைவீதி, தளவாபாளையம் கடைவீதி, புன்னம் சத்திரம், க.பரமத்தி பஸ் நிறுத்தம், தென்னிலை நான்குரோடு, சின்னதாராபுரம் பஸ் நிலையம், எல்லமேடு பிரிவு ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு கேட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கே கூடியிருக்கும் மக்களை பார்க்கும்போது இது தேர்தல் பிரசார கூட்டம் போல் தெரியவில்லை. மாறாக தேர்தல் வெற்றி விழா கூட்டம் போல் தான் பார்க்க முடிகிறது. தி.மு.க. சார்பில் இங்கு போட்டியிடும் வேட்பாளர் யார்? அவர் (செந்தில்பாலாஜி) எத்தனை கட்சிக்கு போயிருக்கிறார் என்பது மக்களுக்கு தெரியும். ம.தி.மு.க., தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டார். ஆனால் அவர் நன்றி மறந்து, எம்.ஜி.ஆரால் தீய சக்தி என கருதப்பட்டவர்களுடன் போய் சேர்ந்து விட்டார்.
5 ஆண்டு காலம் தான் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு பதவி காலம் ஆகும். அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே 3 கட்சிகளுக்கு மாறியிருப்பவர் தான் செந்தில்பாலாஜி. எதிரிகளோடு சேர்ந்து அ.தி.மு.க.வை உடைத்து, ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று முயற்சித்து சில எம்.எல்.ஏக்களை அழைத்து சென்றார். அவர்கள் தற்போது நடுத்தெருவில் தான் நிற்கிறார்கள். மேலும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பலர் ஒருங்கிணைந்து தான் செந்தில்பாலாஜியை கடந்த 2016-ல் வெற்றி பெற செய்தோம். அதையெல்லாமல் மறந்து விட்ட அவரால், மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும். அவர் ஒரு அரசியல் வியாபாரி.
எனவே நிலம் தருவது உள்ளிட்ட ஆசை வார்த்தைகளை அவர் காட்டினாலும், மக்கள் தக்க பாடத்தை தேர்தலில் புகட்ட வேண்டும். ஆளும் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால் தான் மக்களது பிரச்சினைகளை எளிமையாக தீர்க்க முடியும் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். ஜெயலலிதா இருக்கும் போது தற்போதைய அ.தி.மு.க. வேட்பாளருக்கு (வி.வி.செந்தில்நாதன்) கடந்த 2011-ல் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அப்போது அவரது வெற்றியை எட்டா கனியாக்கியதும் செந்தில்பாலாஜி தான்.
அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் மீண்டும் மக்களை நாடி வந்திருக்கிறார். தேர்தலில் தோல்வியுற்றாலும் அதே கட்சிக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவர் நமது வேட்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. அரசு சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி ஏற்படுத்தும் முயற்சியை கோர்ட்டில் வழக்கு போட்டு தடுக்க முயன்றவர் செந்தில்பாலாஜி. ஆனால் அதையெல்லாம் தகர்த்து மக்களுக்காக மருத்துவக்கல்லூரி திட்டத்தை செயல்படுத்தியவர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி-பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 ஊராட்சிகளில் ரூ.220 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தால் மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப் படும். மேலும் தேர்தல் முடிந்ததும் ரூ.490 கோடியில் காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணை பணிகள் தொடங்கப்பட்டு, 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற வழிவகை செய்யப்படும். மேலும் நீர் மேலாண்மை திட்டப்படி தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளன. இன்னமும் ஏரி, குளம், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.
கோதாவரி-காவிரி நதி இணைப்பு திட்டம் கரூர் மாவட்டத்தில் தான் முடிவடைகிறது. இதனால் கிடைக்கும் 200 டி.எம்.சி. தண்ணீரை விவசாயிகள் பாசனத்திற்கு தங்கு தடையின்றி பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஆனால் கர்நாடகாவில் ராகுல் காந்தி பேசிய போது, பிரதமரானவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கூறுகிறார். நாம் சட்ட போராட்டம் நடத்தி பெற்ற காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடிநீருக்கே அல்லல்படுகிற சூழலில் மேகதாது அணை கட்டப்பட்டால் கரூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். விவசாய நிலங்கள் வறண்ட பாலைவனமாக மாறிவிடும். எனவே இதனை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆகவே தண்ணீர் வர வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது.
துரைமுருகனின் மகன் போட்டியிடும் தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரின் அடிப்படையில் தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவருக்கு வேண்டப்பட்டவரின் இடங்களில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் தான் வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்ட தகவல் உலகத்துக்கே தெரியும்.
ஆனால் தனது வீட்டில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது என நான் பேசியதாக துரைமுருகன் குற்றம் சாட்டுகிறார். அப்படி ஏதும் நான் பேசவில்லை. நான் பேசியது பத்திரிகைகளில் வந்துள்ளது. அதை பார்த்தால் தெரிந்துவிடும். விவரமில்லாமல் முதல்-அமைச்சர் பேசுகிறார் என ஒரு சராசரி மனிதனை சொல்வது போல் அவர் கூறியதால் தான் இந்த கருத்தினை முன்வைக்கிறேன். ஆகவே விவரமுள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் ஆதங்கத்தை எப்படி ஏற்க முடியும்.
செந்தில்பாலாஜி தற்போது அதை செய்வேன், இதை செய்வேன் என்று கூறுகிறார். முதலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் செய்த காரியத்தை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் அ.தி.மு.க. அரசு சார்பில் தைப்பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கினோம். ஆனால் அதை கொடுக்க விடாமல் வழக்கு போட்டு தடுத்தது தி.மு.க. தான். அதுமட்டும் அல்ல ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட போதும் கூட, அதனை நிறுத்தவும் வழக்கு தொடர்ந்தது தி.மு.க. தான்.
மேலும் ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் அவரது வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்திடமும் புகார் கூறி அந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். ஆகவே ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சியாக தி.மு.க. இருக்கிற போது, செந்தில்பாலாஜியால் எப்படி நிலம் கொடுக்க முடியும்?. மக்களிடம் இருந்து நிலத்தை பிடுங்காமல் இருந்தாலே போதும் என்று தான் நினைக்க தோன்றுகிறது. ஆனால் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து அதனை முனைப்புடன் நிறைவேற்றும் கட்சி அ.தி.மு.க. என்பது எல்லோருக்கும் தெரியும்.
நான் இப்போதும் கூட முதல்-அமைச்சராக உங்கள் (மக்கள்) முன் நிற்கவில்லை. ஒரு விவசாயியாக தான் நிற்கிறேன். நீங்கள் தான் முதல்-அமைச்சர். நீங்கள் கட்டளையிடுவதை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படியல்ல. தான் ஒரு கட்சியின் தலைவர், எதிர்காலத்திலே முதல்-அமைச்சர் ஆவேன் என்கிற அகம்பாவத்தோடு பேசி வருகிறார். 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிவதற்குள்ளேயே அவர் முதல்-அமைச்சர் கனவு காண்கிறார்.
அவரது கனவு எல்லாம் கானல் நீராகத்தான் போகும். தற்போது 97 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும், 22 தொகுதிகளில் வெற்றி பெற்றதும் விரைவில் தி.மு.க. ஆட்சி அமையும் என்றும் மதுரையில் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அப்போது எதற்கு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள். அ.தி.மு.க. வெற்றி பெறும் என நினைப்பதால் தான் அத்தகைய நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story