கோடை வெயிலில் இருந்து மயில்களை பாதுகாக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுமா?


கோடை வெயிலில் இருந்து மயில்களை பாதுகாக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுமா?
x
தினத்தந்தி 6 May 2019 4:45 AM IST (Updated: 5 May 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

கோடை வெயிலில் இருந்து மயில்களை பாதுகாக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுமா? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதுக்கோட்டை,

இந்தியாவின் தேசிய பறவையான மயில்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளன. மாவட்டத்தில் காடுகள் அதிக அளவில் இருந்ததால் காட்டில் இருந்த பழமரங்கள் உள்ளிட்டவைகளில் கிடைக்கும் உணவுகளை வைத்து காட்டிற்கு உள்ளேயே மயில்கள் வாழ்ந்து வந்தன. மயில்கள் தோகை விரித்து ஆடும் அழகையும், அவைகள் எழுப்பும் ஒலியையும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு நிமிடம் நின்று அதை ரசித்து விட்டு தான் செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் வனத்துறையில் பழ மரங்கள் வெட்டப்பட்டு, அதற்கு பதிலாக தைலமரங்கள், சவுக்கு போன்ற மரங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுவதாலும், ஒரு சில காட்டுப்பகுதிகளை தற்போது ஆக்கிரமிப்புகாரர்களின் பிடியில் சிக்கி உள்ளதாலும், காட்டில் இருந்த மயில்கள் ஊருக்குள் வந்து விட்டன. இதனால் மயில்களை சமூக விரோதிகள் வேட்டையாடும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. மேலும் மயில்கள் சாலையை கடக்கும் போது அந்த வழியாக வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இங்கு பலவகையான மரங்கள், மூலிகை செடிகள் போன்றவை இருந்தன. மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட மயில்கள் இருந்தன.

இந்த மயில்கள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசும்போது, ஆங்காங்கே மயில்கள் தொகையை விரித்து ஆடும். மேலும் மயில்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அவற்றிற்கு தேவையான உணவுகள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை தாக்கிய கஜா புயல், கலெக்டர் அலுவலகத்தையும் புரட்டி போட்டது. இதில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பெரும்பாலான மரங்கள் சாய்ந்தன. மேலும் கஜா புயலுக்கு பிறகு போதிய மழை பெய்யாததால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குட்டைகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்கள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் கலெக்டர் அலுவலகத்தை வெளியே செல்கின்றன.

இதனால் தற்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மயில்கள் மட்டுமே உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குட்டைகளில் தினமும் தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைத்து, அவற்றில் தினமும் தண்ணீர் நிரப்பி மயில்களின் தாகத்தை தீர்க்க வேண்டும். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மயில்கள் சரணாலயம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து விவசாயி தனபதி கூறுகையில், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு இருந்த பெரும்பாலான மரங்கள் கஜா புயலின் கோரதாண்டவத்தில் சாய்ந்து விட்டன. இதனால் தற்போது கலெக்டர் அலுவலக வளாக பகுதி சிறிய பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.

உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து புதிய மரக்கன்றுகளை நட்டு, அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்களை பாதுகாக்கும் வகையில் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும். மேலும் மயில்களை கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குட்டைகள் மற்றும் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து அவற்றில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்றார்.

Next Story