கீரமங்கலத்தில் வாய்க்கால்களை சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்
கீரமங்கலத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பொருட்டு விவசாயிகள் சொந்த செலவில் குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை சீரமைத்து வருகின்றனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம், கீரமங்கலம், செரியலூர் வழியாக அம்புலி ஆறு என்னும் காட்டாறு செல்கிறது. இந்த ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் கொத்தமங்கலத்தில் உள்ள தடுப்பணையில் இருந்து தனி கால்வாய் மூலம் சென்று சேந்தன்குடியில் உள்ள 3 கி.மீ. சுற்றளவுள்ள பெரியாத்தாள் ஊரணி ஏரியில் நிரம்பும். இந்த ஏரி நிரம்பினால் சுற்றியுள்ள சுமார் 20 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததாலும் வரத்து வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளாலும் பெரியாத்தாள் ஊரணி ஏரி தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.
அதேபோல நகரம் பெரியகுளம், கீரமங்கலம் கல்லாகுளம், கடியாகுளம் ஆகிய பெரிய குளங்களும் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு மற்றும் அம்புலி ஆறு ஆக்கிரமிப்புகளாலும் தண்ணீர் செல்ல முடியாமல் தண்ணீர் இன்றி கருவேலங் காடுகளாக காட்சி அளிப்பதுடன் காட்டாற்று தண்ணீரும் வீணாகி கடலுக்கு சென்று விடுகிறது. கடந்த சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் சுமார் 500 அடிக்கு கீழே சென்றுவிட்டது. அதனால் மரங்களும் கருகிவிட்டன. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராம விவசாயிகள், அம்புலி ஆற்றில் 3 கி.மீ. தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்டினால், நிலத்தடி நீர் சேமிக்க முடியும் என்றும், எனவே உடனடியாக தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று பல முறை அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மாங்காடு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தடுப்பணையும் சில மாதங்களில் உடைந்து நாசமானது. இந்த நிலையில் கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதி இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து நிலத்தடி நீரை பாதுகாக்க முதல்கட்டமாக தங்கள் சொந்த செலவில் அம்புலி ஆற்றில் தடுப்புகளை ஏற்படுத்தி தண்ணீர் பெரிய குளங்களான கல்லாகுளம் மற்றும் கடியாகுளம் ஆகிய இரு குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில், வரத்து வாய்க்கால்களையும் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2017-ல் ஒரு முறை தடுப்புகளை ஏற்படுத்தி தண்ணீர் கொண்டு சென்றனர். தற்போது அந்த வாய்க்கால் தூர்ந்துவிட்டது. அதனால் மீண்டும் அதனை பொக்லைன் எந்திரம் மூலம் அதனை சீரமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதனால் கீரமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புகள் உள்ளது.
கீரமங்கலம் பகுதி விவசாயிகள் சொந்த செலவில் தடுப்பணை அமைத்து குளங்களில் தண்ணீர் தேங்க வரத்து வாய்க்கால்களையும் சீரமைப்பதை போல நகரம் மற்றும் சேந்தன்குடி விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிலத்தடி நீரை சேமிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் குளம், ஏரி, வாய்க்கால்களில் 15 முதல் 20 அடி வரை ஆழ்குழாய்கள் அமைத்து மழைத் தண்ணீரை பூமிக்குள் செலுத்தி நிலத்தடி நீரை சேமிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் பிரச்சினை பெரிதாக தொடங்கிவிட்டது. கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு, மறமடக்கி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே சென்றுவிட்டது. மற்ற கிராமங்களில் 600 அடி வரை சென்றுவிட்டது. இந்த நிலையில் நிலத்தடி நீரை சேமிக்காவிட்டால் தண்ணீர் தட்டுப்பாடு பெரிதாக இருக்கும் என்று நீதிமன்றமும் கூறியுள்ளது.
இந்த நிலையில் தான் காட்டாற்றில் வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை ஆங்காங்கே தடுப்பணைகள் அமைத்து அருகில் உள்ள குளங்களில் தண்ணீரை தேக்கி சேமித்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதனால் கீழே சென்ற நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் காட்டாறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றினால் மேலும் தண்ணீர் செல்ல வசதியாக இருக்கும் என்றனர்.
விவசாயிகளே நிலத்தடி நீரை சேமிக்க தடுப்பணை கட்டியதை சுற்றுவட்டார கிராம விவசாயிகள் பாராட்டியதுடன், தங்கள் கிராமங்களிலும் தடுப்பணைகள் கட்டும் பணிகளில் தீவிரமாக உள்ளனர்.
Related Tags :
Next Story