தஞ்சை அருகே, தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை - போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க மனைவி வலியுறுத்தல்
தஞ்சை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளியின் மனைவி வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி உப்பரிகை வடக்குத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன். தொழிலாளி. சம்பவத்தன்று நாகராஜன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகராஜன் தற்கொலை குறித்து அவருடைய மனைவி ஜான்சிராணி தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். புகாரில், “எனது கணவர் நாகராஜன் மீது கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் ஒருவர் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு அழைத்தார். அதன் பேரில் விசாரணைக்கு எனது கணவர் சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய சட்டைப்பையில் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் எனது கணவரிடம் ஒருவர் இடம் வாங்கித்தரச்சொல்லி ரூ.65 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் எனது கணவரை மிரட்டி ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் தர வேண்டும் என்று எழுதித்தர சொல்லி உள்ளார்கள். இதனால் மனமுடைந்து மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனவே எனது கணவர் சாவுக்கு காரணமான புகார் கொடுத்த 2 பேர் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.
இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story