களம்பூர் அருகே மாடுகளை திருடிய கும்பலுக்கு அடி-உதை 3 பேர் கைது


களம்பூர் அருகே மாடுகளை திருடிய கும்பலுக்கு அடி-உதை 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2019 10:15 PM GMT (Updated: 2019-05-06T00:49:51+05:30)

களம்பூர் அருகே மாடுகளை திருடிய கும்பலை, வியாபாரிகள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி, 

களம்பூரை அடுத்த தேப்பனந்தல் கிராமத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை அன்று மாட்டு சந்தை நடைபெற்று வருகிறது. இந்த மாட்டு சந்தைக்கு திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

நேற்று முன்தினம் வடமாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயசீலன், கீழ்பட்டு கிராமத்தை சேர்ந்த முத்து ஆகிய இருவரும் தங்களது மாடுகளை சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் அந்த பகுதியில் மாடுகளை கட்டி வைத்தனர்.

அப்போது அங்கு வந்த கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த விநாயகம், அவரது மகன் தேவராஜ், கீழ்பென்னாத்தூர் கிராமத்தை சேர்ந்த விநாயகத்தின் மாமனார் மாட்டு தரகர் கன்னியப்பன் மற்றும் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த வேன் டிரைவர் ராஜேஷ் ஆகிய 4 பேர் சேர்ந்து அங்கு கட்டப்பட்டு இருந்த மாடுகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தனர்.

இதனை கண்டதும் அக்கம் பக்கத்தில் இருந்த மாட்டு வியாபாரிகள், அந்த கும்பலை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து மரத்தில் கட்டி வைத்தனர். இதில் தேவராஜ் தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து பிடிபட்ட 3 பேரும் களம்பூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 6 மாத காலமாக களம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட மாடுகளை திருடி விற்றது தெரியவந்தது.

பின்னர் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story