மிராரோட்டில் ஸ்கூட்டரில் சென்று நகைப்பறித்த தம்பதி கைது


மிராரோட்டில் ஸ்கூட்டரில் சென்று நகைப்பறித்த தம்பதி கைது
x
தினத்தந்தி 6 May 2019 3:11 AM IST (Updated: 6 May 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

மிராரோட்டில்ஸ்கூட்டரில் சென்றுநகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

தானே மாவட்டம் மிராரோடு பகுதியில் பெண் உள்பட 2 பேர் ஸ்கூட்டரில் சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவரையும் அடையாளம் காண்பதற்காக சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில், ஸ்கூட்டரை ஓட்டும் ஆசாமி ஹெல்மெட் அணிந்து இருந்தார். ஸ்கூட்டரின் பின்னால் இருந்து நகைபறிக்கும் பெண் கண் மட்டும் தெரியும்படி முகத்தை துணியால் மூடியிருந்தார். போலீசார் ஸ்கூட்டரின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், ஸ்கூட்டரில் சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்தது பால்கர் மாவட்டம் விரார் கோப்சர்பாராவை சேர்ந்த இர்சாத் (வயது26) மற்றும் அவரது மனைவி ஹீனாகான் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் காஷிமிராவில் மூன்று பேரிடமும், மிராரோடு மற்றும் நயாநகரில் தலா 2 பேரிடமும் நகைபறித்ததாக தெரிவித்தனர்.

அந்த நகைகளை விற்று பணமாக்கி விட்டதும் தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் இருந்த ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story