தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது
ஈரோடு அருகே தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தனியார் நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தன்நகர் ஜெகநாதர் வீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 43). தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா. ஸ்ரீதர் குமலன்குட்டையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை முழுமையாக செலுத்தாததால் பணத்தை கேட்டு தொல்லைப்படுத்தியுள்ளனர்.
இதில் மனவேதனை அடைந்த ஸ்ரீதர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து ஸ்ரீதரை தற்கொலைக்கு தூண்டிய நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஸ்ரீதரை தற்கொலைக்கு தூண்டியதாக நிதி நிறுவன உரிமையாளர் திலிப்குமார், ஊழியரான குமலன்குட்டையை சேர்ந்த நடராஜின் மகன் வெங்கடேஷ் (23) ஆகியோர் மீது சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் வெங்கடேசை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள திலிப்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.