வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் மூலம் மாற்றுச்சான்றிதழ் பள்ளி கல்வித்துறை உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் கம்ப்யூட்டர் மூலம் மாற்றுச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர்,
பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தொடக்க, இடைநிலை, மேல்நிலை கல்வி பயிலும் மாணவ–மாணவிகளுக்கு இடமாறுதல் மற்றும் கல்வி நிறைவின்போது மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ் கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் மூலமே வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
இணையதளத்தில் இருந்து மாணவர்களின் மாற்றுச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்டு அலுவலக முத்திரையுடன் வழங்கும் வகையில் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளியின் இணைய பக்கத்தில் மாணவர் என்று குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அந்த பக்கத்தில் மாணவரின் நடத்தை, அங்க அடையாளம், தேர்ச்சி விவரம், கல்வி பயின்ற காலம், முதல் மொழி, பயிற்று மொழி போன்ற விவரங்களை அதற்குரிய இடங்களில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட உடன் மாற்றுச்சான்றிதழில் மாணவரின் புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட மாற்றுச்சான்றிதழ் நகலில் தலைமை ஆசிரியர் கையொப்பம், அலுவலக முத்திரையிட்டு வழங்க வேண்டும். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த விவரத்தை தெரிவித்து கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுச் சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தாலும் பல தொடக்கப்பள்ளிகளில் இணையதள வசதியே செய்து தரப்படாத நிலை உள்ளது. எனவே இந்த பள்ளிகளில் கணினி மூலம் மாற்றுச்சான்றிதழ் வழங்குவது என்பது இயலாத காரியம். இதனால் இந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனியார் கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று மாற்றுச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே பள்ளி கல்வித்துறை முதல் கட்டமாக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் இந்த நடைமுறையை அமல்படுத்தி விட்டு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணினி வசதி செய்து தந்த பின்பு இந்த நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.