தமிழகத்தை வஞ்சித்தவர் மோடி; காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு


தமிழகத்தை வஞ்சித்தவர் மோடி; காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு
x
தினத்தந்தி 6 May 2019 4:40 AM IST (Updated: 6 May 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மோடி தமிழத்தை வஞ்சித்தவர் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கினார். காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஜெயராமன், மகேந்திரன், சுப்பிரமணி, நாகேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, மதுரை மாநகர் தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் தளபதி மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:–

பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகார ஆட்சி செய்கிறார். பா.ஜ.க.வின் தேர்தல் விதிமீறலை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் பிரதமருக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டம் என்ற நிலையை தேர்தல் ஆணையம் வெளிப்படுத்தி வருகிறது. நாட்டில் 25 கோடி பேருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல்காந்தி தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பது சிறப்பு. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் தேர்தல் அறிக்கை இருப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தது. அதை எதிர்த்தார்கள். 100 நாள் வேலை திட்டம் என்பது வறுமையை ஒழிக்க ஒரு வாய்ப்பை தருவதற்காக தொடங்கப்பட்டது. வறுமையை அறியாதவர்கள் ஏழ்மையை புரியாதவர்கள் 100 நாள் வேலை திட்டத்தை குறை சொன்னார்கள். ராக்கெட் விடலாம், அணுகுண்டு தயாரிக்கலாம், ராணுவத்தை பலப்படுத்தலாம். ஆனால் அதையெல்லாம்விட பெரியது வறுமையை ஒழிப்பது தான். தமிழகத்தில் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட போது மோடி மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. உரிய நிவாரணமும் வழங்கவில்லை. ஆனால் தற்போது பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு உடனே செல்கிறார். காரணம் அங்கு தேர்தல் நடக்கிறது. இதை பார்க்கும்போது மோடி தமிழகத்தை வஞ்சித்து உள்ளார். தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிற்கே நன்மை பிறக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story