அன்னிய தயாரிப்பு பொருட்கள் விற்பனையை தவிர்க்க வேண்டும், சுதேசி பொருளாதார பிரகடன மாநில மாநாட்டில் வணிகர்களுக்கு வேண்டுகோள்


அன்னிய தயாரிப்பு பொருட்கள் விற்பனையை தவிர்க்க வேண்டும், சுதேசி பொருளாதார பிரகடன மாநில மாநாட்டில் வணிகர்களுக்கு வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 May 2019 4:00 AM IST (Updated: 6 May 2019 5:13 AM IST)
t-max-icont-min-icon

கடைகளில் அன்னிய தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சுதேசி பொருளாதார பிரகடன மாநில மாநாட்டில் வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 36-வது வணிகர் தின சுதேசி பொருளாதார பிரகடன மாநில மாநாடு தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் வெள்ளையன் தலைமை தாங்கி பேசினார். பொதுச்செயலாளர் தேவராஜ், பொருளாளர் ரத்தினம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டின் மேடை முன்பு தேசிய கொடி, வணிக கொடி ஏற்றப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக உலக தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன், அகில இந்திய வர்த்தக சங்க தலைவர் ஷியாம் பிஹாரி மிஸ்ரா, நிர்வாகி சுனில் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இந்தியாவில் வியாபாரம் செய்ய அன்னியரை அனுமதிக்க கூடாது. சில்லறை வணிகத்தை வீழ்த்தவே ஆன்லைன் வணிகத்தை கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, பண மதிப்பிழப்பு நடடிக்கை, 100 சதவீதம் அன்னிய முதலீடு ஆகியவற்றால் அழிவின் பாதைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் சில்லறை வணிகத்தை முற்றிலும் அழித்துவிட வேண்டும் என்பதற்காகவே ஆன்லைன் வணிகத்தை மத்திய அரசு அனுமதித்து இருக்கிறது.

மத்திய அரசின் இந்த வணிகர் விரோத போக்கை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. ஆன்லைன் வணிகத்தை அடித்து விரட்டும் முயற்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழு மூச்சாக இறங்கும். அதற்கு அனைவரும் துணை இருக்க வேண்டும். ஒட்டுமொத்த சில்லறை வணிகத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து லட்சக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரத்தை நசுக்க நினைக்கும் மத்திய அரசின் விரோத போக்கை இந்த மாநாடு கண்டிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்கும் படி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். புத்தன்தருவை குளத்திற்கு தாமிரபரணி நீரை கொண்டு செல்லும் திட்டத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். மத்திய அரசின் புதிய விதை சட்டத்தை நடைமுறை படுத்துவதையும் மரபணு மாற்று விதைகளை ஊக்குவிப்பதையும் இந்த மாநாடு கண்டிக்கிறது.

வணிகர்கள் தங்களது கடைகளில் அன்னிய தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். வாடிக்கையாளர்களான நாட்டு மக்களும் சுதேசி தயாரிப்புகளையே வாங்க வேண்டும். தமிழக அரசு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-யை கைவிட வேண்டும். தமிழக அரசு நச்சு தன்மையுள்ள குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் வசூலிக்கப்படும் குப்பை வரி, சேவை வரி போன்றவை பன்மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுவதால், வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு உள்ளாட்சி நிர்வாகம் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். உள்நாட்டு நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அன்னிய வணிக நிறுவனங்களுக்கு தங்கள் தயாரிப்புகளை வினியோகம் செய்யக்கூடாது. கோவில் இடங்களில் உள்ள கடைகளை அகற்ற கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 4 ஆயிரத்துக்கும் அதிகமான வணிகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். முன்னதாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்த 13 பேருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Next Story