இறுதி ஊர்வலத்தின்போது தகராறு, ஆட்டோவை கவிழ்த்து போட்டு பெண் கொலை - 2 வாலிபர்கள் கைது


இறுதி ஊர்வலத்தின்போது தகராறு, ஆட்டோவை கவிழ்த்து போட்டு பெண் கொலை - 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 6 May 2019 4:00 AM IST (Updated: 6 May 2019 5:13 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே இறுதி ஊர்வலத்தின்போது ஆட்டோவை கவிழ்த்து போட்டு பெண்ணை படுகொலை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நிலக்கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள துள்ளுபட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). ஜோதிடர். நேற்று முன்தினம் இவர், உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து மாலையில் அவருடைய இறுதிச்சடங்கு நிலக்கோட்டை- திண்டுக்கல் சாலையில் உள்ள மயானத்தில் நடந்தது.

முன்னதாக முருகனின் உடலை அவருடைய உறவினர்கள் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக மயானம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது செம்பட்டியில் இருந்து நிலக்கோட்டை நோக்கி வந்த ஒரு ஆட்டோ, நிலக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே இறுதி ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது லேசாக உரசியது.

இதில் ஆத்திரமடைந்த ஜோதிடரின் உறவினர்கள் சிலர் ஆட்டோ டிரைவரான மதன்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் அவர்கள், பயணியுடன் ஆட்டோவை கீழே கவிழ்த்து போட்டனர். இதில், ஆட்டோவில் வந்த மதுரை அண்ணாநகரை சேர்ந்த மலர்ராஜா மனைவி முத்தம்மாள் (48) படுகாயமடைந்தார்.

ஆட்டோவுக்குள் சிக்கிய முத்தம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் கொலை வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவை கவிழ்த்து பெண்ணை கொலை செய்ததாக துள்ளுபட்டியை சேர்ந்த ரவி மகன் அஜித்குமார் (25), சுரேஷ் மகன் மதிவாணன் (21) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவான சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 More update

Next Story