சிங்கப்பூரில் இருந்து, அதிநவீன மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் தஞ்சை வந்தனர்


சிங்கப்பூரில் இருந்து, அதிநவீன மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் தஞ்சை வந்தனர்
x
தினத்தந்தி 6 May 2019 3:45 AM IST (Updated: 6 May 2019 5:13 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூர் நாட்டின் 200-வது ஆண்டு கொண்டாட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அதிநவீன மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் சிங்கப்பூரில் இருந்து தஞ்சை வந்தனர்.

தஞ்சாவூர்,

சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் (வயது53), பாலச்சந்திரன் (56), அருணகிரி (52). தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர்கள் 3 பேரும் நேற்று அதிநவீன மோட்டார் சைக்கிளில் தஞ்சை பெரியகோவிலுக்கு வந்தனர். அவர்கள் பெரியகோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, வெளியே வந்தனர்.

இந்த நவீன மோட்டார்சைக்கிள் விலை ரூ.28 லட்சம் ஆகும். இதில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி, கூகுள்மேப், டி.வி., ரேடியோ, ஏ.சி.வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த மோட்டார்சைக்கிள்கள் 1,800 சி.சி. திறன் கொண்டவை. பெட்ரோலால் இயக்கப்படும் இந்த மோட்டார்சைக்கிள் 1 லிட்டருக்கு 15 கி.மீ தூரம் செல்லும்.

இந்த மோட்டார்சைக்கிளை பார்த்ததும், பெரியகோவிலுக்கு வந்த பொதுமக்கள் அதன் அருகில் திரண்டு வந்து நின்று கொண்டு புகைப்படம் எடுத்தனர்.

இது குறித்து மோட்டார்சைக்கிளில் வலம் வந்த பாலசந்திரன், பன்னீர்செல்வம், அருணகிரி ஆகியோர் கூறியதாவது:- “நாங்கள் சிங்கப்பூரில் தொழில் செய்து வருகிறோம். சிங்கப்பூர் நாடு தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகின்றன. இதனை பல்வேறு நாடுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவே நாங்கள் மோட்டார்சைக்கிள் மூலம் வலம் வருகிறோம்.

நாங்கள் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி சிங்கப்பூரில் எங்கள் பயணத்தை தொடங்கினோம். அங்கிருந்து மலேசியா, தாய்லாந்து, மியான்மர், வங்காளதேசம், திபெத், நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தோம். பெரும்பாலும் சாலை வழியாகவே வந்தோம். ஒரு சில இடங்களில் படகில் மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு பயணம் செய்தோம். 1 நாளில் சுமார் 400 கி.மீ. தூரம் பயணம் செய்து வருகிறோம்.இதன் மூலம் 13 ஆயிரம் கி.மீ. தூரம் செல்ல திட்டமிட்டுள்ளோம். தஞ்சை பெரியகோவிலில் இருந்து வேளாங்கண்ணி உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு 8-ந்தேதி(புதன்கிழமை) சென்னையில் பயணத்தை நிறைவு செய்து விட்டு விமானம் மூலம் மீண்டும் சிங்கப்பூர் செல்ல உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story