உள்ளாட்சியில் கொள்ளையடிப்பதற்காக தேர்தலை நடத்தாமல் உள்ளனர் - சூலூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
உள்ளாட்சியில் கொள்ளையடிப்பதற்காக, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளனர் என்று சூலூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவை,
கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்த வேனில் தென்னம்பாளையம், வாகராயம்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர், சாமளாபுரம் பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
பா.ஜனதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. நல்ல முடிவை வழங்கி உள்ளர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும். கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்ற தேர்தல் மோடியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல். வரும் 19-ந் தேதி நடைபெற உள்ள தேர்தல் எடப்பாடியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்.
தற்போதைய ஆட்சி மைனாரிட்டி ஆட்சி, மோடி முட்டுக்கட்டை கொடுத்து இந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்து வருகிறார். மோடி பிரதமராக இருந்ததால்தான் ஆட்சி நீடிக்கிறது. ராகுல் பிரதமரானவுடன் எடப்பாடி ஆட்சி நிலைக்க வாய்ப்பில்லை.
தி.மு.க., காங்கிரசை சேர்த்து மொத்தம் 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். ஏற்கனவே ஒருவருடம் எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் இருந்த 18 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவை அனைத்திலும் நாம்தான் வெற்றி பெறுவோம். இதனை தொடர்ந்து சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 100 சதவீதம் நாம்தான் வெற்றி பெறுவோம்.
மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் 118 பேர் இருந்தால் தான் மெஜாரிட்டியாக ஆட்சியில் இருக்க முடியும். தேர்தல் முடிவு வந்தவுடன் 22 எம்.எல்.ஏ.க்கள் நமக்கு கிடைத்து விடுவார்கள். இதன் மூலம் நாம் 119 எம்.எல்.ஏ.க்களை பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம். அதனால்தான் தற்போது 3 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் கொடுத்து, புதிய சதித்திட்டம் போட்டுள்ளனர். அந்த சதியை முறியடிப்போம். இதற்காக சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். முதலில் அந்த தீர்மானத்தின் மீதுதான் வாக்கெடுப்பு நடைபெறும். இருந்தாலும் அந்த விவகாரத்திலும் இந்த ஆட்சியில் சதி செய்வார்கள்.
5 ஆண்டு பிரதமராக இருக்கும் பிரதமர் மோடி பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கினார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்றார். ஆனால் அனைத்து தரப்பினரும் ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்ற மோடி, திடீரென்று இரவோடு இரவாக 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார். திருடனை பிடிக்கப்போகிறேன் என்று நல்லவர்களை பிடித்து அடைப்பதுபோல், கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் நல்ல பணத்தை ஒழித்தனர். அவர் வெளிநாடு வாழ் பிரதமராக உள்ளார். வெளிநாடுகளில் இந்திய கருப்பு பணம் நிரம்பி உள்ளது. அதை மீட்டு 15 லட்சம் ரூபாய் மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் போடுவேன் என்றார். ஆனால் 15 காசு கூட போடவில்லை. டெல்லியில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் பிரதமர் மோடி கண்டுகொள்ளவே இல்லை.
வாக்குகளை வாங்க மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதி கொடுத்தார். அவர் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார். புயல், வெள்ளம் மழை வந்தது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இது போன்ற பல கொடுமைகள் நடந்த போதிலும், இந்த மோடி அதற்கு ஒரு அனுதாப கருத்தாவது சொன்னாரா?. மோடி சர்வாதிகாரி. எடப்பாடி உதவாக்கரை.
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் ஓ.பன்னீர் செல்வம் முதல்-அமைச்சராக இருந்தார். சட்ட மன்றத்தில் அவர், என்னை பார்த்து சிரித்தார். அதற்காக அவரது பதவியை பறித்தார் சசிகலா. அவர் தானே முதல்-அமைச்சர் ஆவோம் என்று கணக்கு போட்டார். ஆனால் அவர் சிறைக்கு சென்று விட்டார். எடப்பாடியை சசிகலா முதல்-அமைச்சர் ஆக்கியதும், ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். அதன்பின்னர் துணை முதல்-அமைச்சர் ஆனதும். வாய்மூடி மவுனமாக இருக்கிறார். ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன் 6 முறை சம்மன் அனுப்பியபோதும் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.
திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் நான் மக்களை சந்தித்தபோது சில தாய்மார்கள் என்னிடம் வந்து ‘ஜெயலலிதா மரணத்துக்கான காரணத்தை கண்டறிந்து பாவிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ என்று கூறினார்கள். ஆட்சி மாற்றம் மத்தியில் மட்டுமல்ல தமிழகத்திலும் வரப்போகிறது. அப்போது இந்த மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் தள்ளுவோம். யார் தடுத்தாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டான்.
பொள்ளாச்சியில் 7 வருடமாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு காவல்துறை காணாமல் போனதா? உளவுத்துறை என்ன செய்தது? இதன் பின்னணியில் உள்ளது பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன்கள் என்பது ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜூக்கு, அமைச்சர் வேலுமணி தான் பின்னணி. அதனால் தான் நடவடிக்கை இல்லை. பொள்ளாச்சி விவகாரத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ தமிழரசன் பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக வக்கீல் ஒருவர் புகார் கூறினார். ஆனால் புகார் கொடுத்த வக்கீலை கைது செய்தனர். இந்த அக்கிரமங்களை அகற்ற மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
கோடநாடு என்றாலே மக்களுக்கு தெரியும். அங்கு நடைபெற்ற கொலைகள் குறித்து உண்மை வெளியில் வரவில்லை. அதுகுறித்து பேசக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடைஉத்தரவு வாங்கி இருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவை மதித்து நான் பேசவில்லை.
அமைச்சர் வேலுமணி ஊழல் மணி. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், முதல் சோதனை அவரது வீட்டில்தான். ஆனால் அவர் கொள்ளையடித்த பணத்தை வீட்டில் வைக்க மாட்டார். ஆனால் அவர் கூட இருப்பவர்களே பணம் எங்கு இருக்கிறது என்கிற பட்டியலை கொடுத்து விட்டனர். எடப்பாடி பழனிசாமி அவரை பார்த்து பயப்படுகிறார்.
உள்ளாட்சி தேர்தல் நடத்த இவர்களுக்கு துப்பில்லை. உள்ளாட்சிகளில் பணத்தை நேரடியாக கொள்ளையடிக்கவே இந்த தேர்தலை நடத்தாமல் உள்ளனர். இந்த கொடுமையான ஆட்சிக்கு முடிவு கட்டவே நீங்கள் இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு பெயரளவுக்குத்தான் அடிக்கல் நாட்டி உள்ளனர். இதற்காக கருணாநிதி ஆட்சியில் திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையில் 8 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. இப்போது தேர்தலுக்காக அடிக்கல் நாட்டி உள்ளனர். கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, முதல்-அமைச்சர் எடப்பாடி வீட்டுக்கு சென்று அவரது கையை பிடித்து இடம் கேட்டேன். ஆனால் திட்டமிட்டு மறுத்தனர். இதனால் நீதிமன்றத்திற்கு சென்றோம். நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. ஆகவே கருணாநிதிக்கு 6 அடி நிலம் கொடுக்க மறுத்த அயோக்கியர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கலாமா?.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவோம். விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்போம். அருந்ததி மக்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுப்பதுடன், சமுதாய கூடங்களை கட்டி கொடுப்போம். தீரன் சின்னமலையிடம் படைத்தளபதியாக இருந்த பொல்லான் என்பவருக்கு மணிமண்டபம் கட்டிக்கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story