ஆலங்குளத்தில் துணிகரம், அரிசி ஆலை ஊழியர் வீட்டில் 78 பவுன் நகை கொள்ளை - ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை


ஆலங்குளத்தில் துணிகரம், அரிசி ஆலை ஊழியர் வீட்டில் 78 பவுன் நகை கொள்ளை - ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 5 May 2019 11:15 PM GMT (Updated: 6 May 2019 12:23 AM GMT)

ஆலங்குளத்தில் அரிசி ஆலை ஊழியர் வீட்டில் 78¾ பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு அவர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்து உள்ளது.

ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் காந்தி நகரை சேர்ந்தவர் கஜேந்திரன் என்ற சந்திரவாசகம் (வயது 69). இவர் ஆலங்குளம் அருகே நல்லூரில் உள்ள ஒரு அரிசி ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவ ருடைய மனைவி கல்யாணி (65). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுரேஷ் குமார் பெங்களூருவில் குடும் பத்துடன் வசித்து வருகிறார். 2-வது மகன் வேலவன் ஆலங்குளத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறார். 3-வது மகன் ராகவன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். வேலவன் குடும்பத்துடன் தனது தந்தை வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கல்யாணி நீண்ட நாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் ராகவன் கல்யாணியை சிகிச்சைக்காக சென்னைக்கு வருமாறு அழைத்தார். இதையடுத்து கடந்த 3-ந் தேதி கஜேந்திரன், கல்யாணி மற்றும் வேலவன் குடும்பத்தினர் சென்னைக்கு புறப்பட்டனர்.

பின்னர் நேற்று காலை வேலவன் மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அங்கு பீரோவில் இருந்த துணிகள், பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 78¾ பவுன் தங்க நகைகள் மற்றும் 170 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தன.

இதுகுறித்து வேலவன் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்து 80 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கைரேகை நிபுணர் அகஸ்டா கனகமணி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கொள்ளை யர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில் வரை ஓடி சென்று திரும்பி வந்து விட்டது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்க வில்லை.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அரிசி ஆலை ஊழியர் வீட்டில் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.

Next Story