வணிகர் தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு


வணிகர் தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 6 May 2019 4:00 AM IST (Updated: 6 May 2019 5:53 AM IST)
t-max-icont-min-icon

வணிகர் தினத்தையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

நெல்லை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தின மாநாடு சென்னையில் அதன் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டுக்கு நெல்லை, பாளையங்கோட்டையில் இருந்து ஏராளமான வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்துவிட்டு சென்றனர்.

இதேபோல் தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் வணிகர் தின மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கும் ஏராளமான வணிகர்கள் தங்களுடைய கடைகளை அடைத்துவிட்டு சென்றனர்.

இதனால் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் உள்ள கடைகள் மற்றும் பாளையங்கோட்டை, நெல்லை டவுன் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சில கடைகள் திறந்து இருந்தன.

களக்காடு அண்ணாசாலை, பழைய பஸ்நிலையம் போன்ற பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பஜார் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகளும், ஒரு சில ஓட்டல்கள் மட்டும் திறந்து இருந்தன. மாலையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதேபோல் செங்கோட்டை, சேரன்மாதேவி, கடையம், அம்பை, தென்காசி, சங்கரன்கோவில், திசையன்விளை, ஏர்வாடி, பனகுடி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வணிகர் தினத்தையொட்டி வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து இருந்தனர்.

Next Story