தூத்துக்குடியில், வாலிபரை தாக்கி பணம்- செல்போன் பறிப்பு, 4 பேர் கைது - 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


தூத்துக்குடியில், வாலிபரை தாக்கி பணம்- செல்போன் பறிப்பு, 4 பேர் கைது - 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 May 2019 10:45 PM GMT (Updated: 6 May 2019 12:23 AM GMT)

தூத்துக்குடியில் வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி திரவியபுரத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 25). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு அந்த பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அசோக்கை வழிமறித்து தாக்கினர். பின்னர் அவர் வைத்து இருந்த செல்போன், பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அசோக் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்துராஜா (வயது 23), தாளமுத்துநகர் சுனாமி காலனியை சேர்ந்த செல்வம் (24), திரேஸ்புரத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற லம்பா (23), மேட்டுப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் 4 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து செல்போன், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் வேறு இடங்களில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story