திங்களூர் அருகே தபால் அலுவலகத்தில் ரூ.15 லட்சம் கையாடல் நடந்தது கண்டுபிடிப்பு
திங்களூர் அருகே தபால் அலுவலகத்தில் ரூ.15 லட்சம் கையாடல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை,
பெருந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட திங்களூர் அருகே வெட்டையன்கிணறு கிராமத்தில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு கணக்குகளில் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் தலைமை தபால் நிலைய அலுவலர்கள் கணக்குகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடந்த 2 மாதமாக இந்த ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட தபால் அலுவலக குறைத்தீர்கும் அதிகாரி லாவன்யா கூறியதாவது:–
வெட்டையன் கிணறு தபால் அலுவலகத்தில் இதுவரை 786 கணக்குகளை ஆய்வு செய்துள்ளோம்.
இந்த கணக்குகளில் இதுவரை சுமார் 15 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கணக்குகளை இந்த மாத இறுத்திக்குள் ஆய்வு செய்துவிடுவோம்.
இந்த தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கிய பலரிடம் அதற்கான புத்தகம் இல்லை. இதுபற்றி அவர்களிடம் கேட்டால் நம்பிக்கையின் பேரில் தபால்காரரிடமே கொடுத்து வைத்திருந்தோம் என்கிறார்கள். கணக்கு புத்தகத்தை தபால் காரரிடமே கொடுத்திருந்தால் அதற்கு தபால் நிலைய நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.
எந்த ஒரு நிலையிலும் தபால் அலுவலகத்திலோ, தபால் ஊழியர்களிடமோ கணக்கு புத்தகத்தை வைத்திருக்க கொடுங்கள் என்று தபால் அலுவலகம் கூறுவதில்லை. அதே சமயம் கணக்கு வைத்திருந்த பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட தபால்காரர் மற்றும் தபால் நிலைய அலுவலர் இருவர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிய கணக்கு புத்தகம் இல்லாததால் சேமிப்பு பணத்தை இழந்தவர்களுக்கு எந்த வகையில் பணம் கிடைக்கும் என்பது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஊர் மக்கள் அறிந்துகொள்ள தண்டோராவும் போடப்படும்‘ என்றார்.
இந்தநிலையில் வெட்டையன்கிணறு தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த கிராம சுகாதார செவிலியர் ஜோதி(வயது 50) என்பவர் கூறும்போது, என் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் ரூ.71 ஆயிரமும், என் மகள் பெயரில் கணக்கு தொடங்கி செல்வ மகள் திட்டத்தில் ரூ.47 ஆயிரமும் செலத்தியிருந்தேன்.
இதற்கான புத்தகங்களை நம்பிக்கையின் பேரில் தபால்காரரிடமே கொடுத்திருந்தேன். அவர் இப்போது அவர் புத்தகங்கள் தன்னிடம் இல்லை என்கிறார். என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் என் பணம் கிடைக்குமா? என்று தெரியவில்லை‘ என்று வேதனைப்பட்டார்.
கையால் நடைபெற்றதாக கூறப்படும் தபால் நிலையம் வழக்கம்போல் இயங்குகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அலுவலக நேரத்தில் கூட பூட்டப்பட்டு இருக்கிறது.