ஊத்தங்கரை அருகே, டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்க திரண்டு வரும் பெண்கள்


ஊத்தங்கரை அருகே, டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்க திரண்டு வரும் பெண்கள்
x
தினத்தந்தி 6 May 2019 10:15 PM GMT (Updated: 2019-05-07T00:28:55+05:30)

ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் தினமும் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் திரண்டு வருகிறார்கள்.

ஊத்தங்கரை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ளது சென்னப்பநாயக்கனூர் கிராமம். இந்த கிராமத்தின் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பிற்பகல் 12 மணி அளவில் கடை திறந்ததும், மது பிரியர்கள் பலரும் மதுபாட்டில்கள் வாங்க வருகிறார்கள்.

அவர்களுக்கு நிகராக 20-க்கும் மேற்பட்ட பெண்களும் அங்கு வந்து தினமும் மதுபாட்டில்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் 20 பெண்கள் கூட்டமாக வந்து தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி கொண்டு செல்வதை அந்த பகுதியை சேர்ந்த பலரும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். மேலும் மதுபாட்டில்கள் வாங்க வரும் ஆண்கள் பலரும், பெண்கள் வாங்கி விட்டு சென்ற பிறகு நாம் வாங்கி கொள்ளலாம் என்று ஓரமாக நிற்கிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று பெண்கள் சார்பில் ஒரு புறம் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஊத்தங்கரை அருகே கிராமத்தில் உள்ள மதுக்கடைக்கு பெண்கள் திரண்டு வந்து மது வாங்கி செல்வது வேதனை அளிக்கிறது.

நகர பகுதிகளில் தான் சில இடங்களில் பெண்கள் நாகரீக கலாசாரம் என்ற பெயரில் மது குடிப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கிராமத்திலேயே இவ்வாறு நடப்பது கலாசார சீரழிவையே காட்டுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story