ஓசூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
ஓசூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது சித்தனபள்ளி கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீரை விலைகொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. இது சம்பந்தமாக ஊராட்சி செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நேற்று அப்பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் சில பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி டிராக்டர் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story