அமராவதி வறண்டு போனதால் தாராபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


அமராவதி வறண்டு போனதால் தாராபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 7 May 2019 4:30 AM IST (Updated: 7 May 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

அமராவதி ஆறு வறண்டு போனதால் தாராபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தாராபுரம்,

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அமராவதி ஆறுதான் குடிநீருக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் வற்றாத நதியாக அமராவதி இருந்தபோது, இந்த பகுதியில் குடிநீருக்கு எந்த வகையிலும் பஞ்சம் ஏற்படவில்லை. காலமாற்றத்தின் காரணமாக, இந்த பகுதியில் பருவ மழை சரிவர பெய்யவில்லை. இதனால் அமரவதி அணைக்கு நீர் வரத்து குறைந்து போனது. அமராவதி அணையை நீண்ட காலமாக தூர்வாராமல் இருப்பதால், கிடைக்கின்ற தண்ணீரை அணையில் சேமிக்க முடியவில்லை.

தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக அணையை நம்பியிருந்த பெரும்பாலான பகுதிகள் வறட்சியை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்டால் இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், இந்த பிரச்சினைக்கு இன்னும் நிரந்தர தீர்வுவை ஏற்படுத்த முடியவில்லை.

தாராபுரம் நகராட்சியில் 1964–ல் அமராவதி குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது, 1982–ல் அமராவதி குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்படியிருந்தும் நகர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியவில்லை.

அதன் பிறகு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு குடிநீர் கிடைக்கவில்லை.

2011–ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 7.02 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நகராட்சியில் 56 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். நகர் பகுதிக்கு மட்டும் நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்டங்களால் முழுமையாக குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியவில்லை. எனவே குடிநீர் அல்லாமல் தண்ணீர் தேவைக்காக 30–வார்டுகளில் பல கோடி ரூபாய் செலவு செய்து, ஏராளமான ஆழ்குழாய் கிணறுகளை நகராட்சி நிர்வாகம் அமைத்தது.

அதில் மின் மோட்டார்களை பொருத்தி, அந்தந்த பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆழ்குழாய் கிணறுகள் தான் இந்த பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உதவியாக இருந்து வந்தது. இந்த நிலையில் குடிநீர் தேவைக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமராவதி குடிநீர் திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக அமராவதி ஆற்றின் நடுவே கிணறுகள் அமைக்கப்பட்டன. இது தவிர காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 15 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைத்ததால், கடந்த சில மாதங்களாக நாள்தோறும் குடிநீர் வினியோகம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தற்போது அமராவதி ஆறு நீர் வரத்து இல்லாமல் வறண்டுவிட்டது. அமராவதி ஆற்றை நம்பியிருந்த கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு தற்போது குடிநீர் கிடைப்பதில்லை. நகராட்சி பகுதியில் நாள்தோறும் நடைபெற்று வந்த குடிநீர் வினியோகம், தற்போது வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் அளவும் குறைந்துவிட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. சில பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் அவதிப்படுகிறார்கள்.

குடிநீர் வினியோகம் இல்லாத பகுதிகளுக்கு, லாரிகள் மூலமாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. குடிநீர் பற்றாக்குறையை போக்க அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்த நிலையில் கோடைகாலத்தில் இன்னும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் முன்கூட்டியே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுத்து, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story