மார்ட்டின் நிறுவன ஊழியர் மர்ம சாவு, உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
மார்ட்டின் நிறுவன ஊழியரின் உடலை வாங்க மறுத்து நேற்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது.
கோவை,
கோவையை அடுத்த ஜி.என்.மில்ஸ் வெள்ளக்கிணர் பிரிவை சேர்ந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். இவருக்கு கோவை உள்பட நாடு முழுவதும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் உள்ள மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வந்த கோவை உருமாண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 45) என்பவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் காரமடையை அடுத்த வெள்ளியங்காடு பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பழனிச்சாமி பிணமாக கிடந்தார். அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வருமான வரித்துறையினரின் விசாரணையை தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பழனிச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய மகன் ரோகின்குமார் காரமடை போலீசில் புகார் செய்தார்.
இதற்கிடையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பழனிச்சாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருடைய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர். அவருடைய சாவில் மர்மம் இருப்பதால், நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்பட வில்லை.
இதற்கிடையே, பழனிச்சாமியின் மனைவி சாந்தாமணி மற்றும் உறவினர்கள் நேற்று காலையில் கோவையில் உள்ள மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் ஐ.ஜி. பெரியய்யாவை சந்தித்து மனு கொடுத்தனர். அங்கிருந்து வெளியே வந்த சாந்தாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது கணவர் பழனிச்சாமி, லாட்டரி அதிபரான மார்ட்டினின் நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்தார். கடந்த 30-ந் தேதி எங்கள் வீட்டிற்கு வந்த 8 பேர் தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று கூறியதுடன், எனது கணவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். அப்போது அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தினார்கள். பின்னர் அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கு அழைத்துச்சென்றனர்.
அதன்பிறகு வீடு திரும்பிய எனது கணவர் கையில் காயத்துடன் வந்ததுடன் மிகவும் பதற்றமாகவே இருந்தார். மறுநாள் வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவர் வேலை செய்த நிறுவனத்துக்கு சென்று கேட்டபோது சரியாக பதில் கூறவில்லை. அதன் பிறகு தான் அவர் குளத்தில் பிணமாக கிடந்தது எங்களுக்கு தெரியவந்தது.
எனது கணவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்ய வில்லை. அவருடைய சாவில் மர்மம் இருக்கிறது. மார்ட்டின் நிர்வாகத்தினரும், வருமானவரித்துறை அதிகாரிகள் என்று கூறிய நபர்கள் தான் அவரின் சாவுக்கு காரணம். எனவே எனது கணவரின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம். மேலும் எங்களுக்கு ஆபத்து உள்ளதால் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் மார்ட்டின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எங்கள் நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டாக பணியாற்றிய பழனிச்சாமி கடந்த 3-ந் தேதி இறந்து விட்டார் என்ற செய்தி எங்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்த மனஉளைச்சல் காரணமாக அவர் இறந்தது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிந்து உள்ளது. பழனிச்சாமியின் சாவில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்து வரும் நிலையில், போலீசார் அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தி, பழனிச்சாமியின் சாவுக்கான காரணத்தை கண்டுபிடித்து வெளியே கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story