மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைப்பாதையில், சுற்றுலா வேன் கவிழ்ந்து பெண்கள் - குழந்தைகள் உள்பட 28 பேர் படுகாயம்


மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைப்பாதையில், சுற்றுலா வேன் கவிழ்ந்து பெண்கள் - குழந்தைகள் உள்பட 28 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 May 2019 4:00 AM IST (Updated: 7 May 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு 30 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 28 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மேட்டுப்பாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 22 பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் கடந்த 4-ந் தேதி இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல வேனில் புறப்பட்டனர். வேனை ராஜபாளையத்தை சேர்ந்த டிரைவர் முத்துராஜ் (வயது 44) என்பவர் ஓட்டி சென்றார். இவர்கள் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தில் தங்கினார்கள். நேற்று காலை ஊட்டிக்கு புறப்பட்டு சென்று விட்டு, அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைப்பாதையில் வேன் சென்று கொண்டிருந்தபோது மழை தூறிக்கொண்டிருந்தது.

கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு அருகில் மாலை 4.30 மணிக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 30 அடி பள்ளத்தில் உருண்டு பக்கவாட்டில் சாய்ந்தது. இதனால் வேனுக்குள் இருந்தவர்கள் பயத்தில் அலறினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், சுரேஷ், முரளி, திலக், ஏட்டு ராம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டன. இடிபாடுகளுக்கிடையில் சிக்கி தவித்து கொண்டிருந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சிக்கி 22 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 28 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் சங்கரேஸ்வரி (42), மகாலட்சுமி (20), ராஜலட்சுமி (45), வெள்ளைதுரைச்சி (33), முத்தம்மாள் (50) ஆகிய 5 பெண்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் சந்தோஸ்குமார் (12), முத்துமாரி (36), பிரியா (20), காவியாஸ்ரீ (8), கீதாலட்சுமி (24), டிரைவர் முத்துராஜ் (44), முனீஸ்வரி (45), பாக்கியலட்சுமி (14), சரண்யா (14), காளிராஜ் (28), சிவராமன் (15), ராஜவேலு (10), பிரதீப் (8), மனோஜ்குமார் (14), ஜெயலட்சுமி (45), ஹர்ஷா (14), சித்ராதேவி (7), ஒரு வயது குழந்தை வனிதா மற்றும் சிலர் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story