ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காங்கேயம் தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு


ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காங்கேயம் தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 6 May 2019 11:00 PM GMT (Updated: 6 May 2019 7:06 PM GMT)

வெள்ளகோவில் அருகே உள்ள காவலிபாளையம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காங்கேயம் தாசில்தாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

காங்கேயம்,

காங்கேயம் தாலுகா வெள்ளகோவில் அருகே உள்ள இலக்கமநாயக்கன்பட்டி கிராம உட்கடை காவலிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள், தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.கருப்பையா தலைமையில் நேற்று காங்கேயம் தாசில்தார் விவேகானந்தனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:–

எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் கடந்த 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்களுக்கு முறையாக அரசால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. எங்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள பொது இடத்தை நீண்ட காலமாக ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தி வந்ததோடு இறந்தவர்களை அந்த இடத்தில் வைத்துதான் எங்கள் வழக்கப்படி காரியங்களை நடத்தி வருகிறோம். இந்நிலையில் அந்த பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் குடிசை போட்டுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கிராம மக்கள் மற்றும் சுய உதவிக்குழு பெண்கள் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தை ஆதிதிராவிடர் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


Next Story