உடுமலை பகுதியில் சூரியகாந்தி மகசூல் குறைவு கிளிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு பெரும்பாலும் மக்காச்சோளம், தென்னை மற்றும் காய்கறிப்பயிர்களே அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஒரு சில விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
போடிபட்டி,
உடுமலையை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் மஞ்சள் நிற தொப்பி அணிந்த ராணுவ வீரர்களைப்போல கம்பீரமாக அணிவகுத்து நிற்கும் சூரியகாந்திச் செடிகள் அனைவரையும் கவர்கிறது. அந்தப்பகுதியில் கூட்டம் கூட்டமாக பச்சைக்கிளிகள் கீச் கீச் என்ற ஓசையுடன் பறக்கிறது. இதனையடுத்து வட்டமான தட்டில் குச்சியால் ஓசையெழுப்பியபடி அந்த பகுதிக்கு விரைந்து வந்த விவசாயி மேலும் ஹோய் ஹோய் என்று ஓசையெழுப்பி கிளிகளை விரட்டுகிறார்.
கணபதிபாளையம் பகுதியைச்சேர்ந்த அந்த விவசாயி ஒருவர் சூரியகாந்தி சாகுபடி குறித்து கூறுகையில் ‘‘சூரியகாந்தி சாகுபடி செய்த வயல்வெளி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இதனால் பலரும் வாகனங்களை நிறுத்தி வயல் முன் நின்று செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் எங்கள் வாழ்க்கை அழகாக இல்லை. உழவு, உரம், விதை, கூலி, மருந்து என ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு பிடிக்கிறது. விதைத்து 100 நாட்களில் அறுவடை செய்யமுடியும்.
பூக்கள் பூக்கும் சமயத்தில் அதிக அளவில் தேனீக்கள் வரும். அதனால் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு மகசூல் அதிகரிக்கும். ஆனால் தற்பொழுது தேனீக்கள் அதிக அளவில் வராததால் பூக்கள் சிறியதாகவும் விதைகள் குறைவாகவும் உள்ளதால் மகசூல் பெருமளவு குறையும். அதுமட்டுமல்லாமல் சூரியகாந்தி விதைகள் கிளிகளுக்கு விருப்ப உணவாக உள்ளது.இதனால் கூட்டம் கூட்டமாக வயல்வெளிக்கு படையெடுக்கும் கிளிகள் விதைகளைத் தின்று தீர்க்கிறது.
பொதுவாக காலை மற்றும் மாலை வேலைகளில்தான் கிளிகள் அதிக அளவில் வரும்.ஆனால் தற்பொழுது உச்சி வெயிலிலும் வந்து சேதம் விளைவிக்கிறது. இதனால் பகல் முழுவதும் தட்டுகளைத் தட்டி ஓசையெழுப்பி காவல் காக்க வேண்டிய நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் வயலுக்குள் ஓடியும் பள்ளம் தோண்டியும் சேதப்படுத்துகிறது. இதனால் இரவு பகலாகக் காவல் காக்க வேண்டியதுள்ளது.
சூரியகாந்தி விதைகள் முற்றியதும் அறுவடை செய்து இயந்திரம் மூலம் விதைகளை பிரித்தெடுக்க வேண்டும். காயவைத்து தட்டுவதன் மூலமும் விதைகளை பிரித்தெடுக்கலாம். தற்பொழுது ஒரு கிலோ சூரியகாந்தி விதை ரூ.35–க்கு விற்பனையாகிறது. ஒரு ஏக்கருக்கு அதிக பட்சமாக 2000 கிலோ வரை மகசூல் பெற முடியும்.
ஆனால் மகசூல் குறைவு, கிளிகளால் ஏற்படும் சேதம் போன்றவற்றைத்தாண்டி ஒரு ஏக்கருக்கு 1000 கிலோவாவது கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. உழைப்புக்கான ஊதியம் கிடைக்காவிட்டாலும் போட்ட முதலை எடுத்தாலே போதும் என்ற நிலையில் கொளுத்தும் வெயிலிலும் கிளி விரட்டிக்கொண்டிருக்கிறேன்’’என்று வேதனையுடன் தெரிவித்தார்.